ஜம்மு - காஷ்மீர் பிரதேசத்தின் முதலமைச்சராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா இன்று பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு ஜம்மு - காஷ்மீர் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் மாநாட்டு அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி பங்கேற்றனர்.
மேலும், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி. ராஜா, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக கனிமொழி, உட்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் ஓரிடத்தில் வென்ற நிலையில், இக்கூட்டணிக்கு 4 சுயேச்சைகளும் ஆம் ஆத்மியும் (1) ஆதரவு தெரிவித்ததால் மொத்த பலம் 54ஆக உள்ளது.
இதையடுத்து, சட்டப் பேரவை தேசிய மாநாட்டுக் கட்சிக் குழு தலைவராக உமா் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார். துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்த அவா், தனது ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதத்தை வழங்கி, ஆட்சியமைக்க உரிமை கோரினார்.