காவலர்களால் தான் எப்படி தாக்கப்பட்டுள்ளேன் என்பதை காட்டும் பாதிக்கப்பட்ட பெண். 
இந்தியா

போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல்: நீதி விசாரணைக்கு உத்தரவு!

Staff Writer

போலீஸ் காவலில் ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், நீதி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டப்பட்டுள்ளது.

ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் கடந்த 14ஆம் தேதி இரவு ராணுவ அதிகாரி தன்னுடைய வருங்கால மனைவியுடன் காரில் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் பரத்பூர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அந்த பெண்ணை காவலர்கள் தாக்கியதோடு, பாலியல் ரீதியாக துன்புறுத்தவும் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் வெளியே கசிய, ஒடிசா அரசு சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, பரத்பூர் காவல் ஆய்வாளர் உட்பட ஐந்து காவல் அதிகாரிகள் பணி நீக்கம்செய்யப்பட்டனர். மாநில டிஜிபி-யிடம் இது தொடர்பாக தேசிய பெண்கள் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது.

காயம் அடைந்த அந்த பெண் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. இந்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், மாநில அரசு அதற்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா மாநில முதலமைச்சர் மோகன் சரண் மாஜி வெளியிட்டுள்ள உத்தரவில்: ”ராணுவ அதிகாரியின் வருங்கால மனைவி காவல் நிலையத்தில் துன்புறுத்தப்பட்டது பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானது தொடர்பான வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 60 நாள்களில் அறிக்கை சமர்ப்பிக்கும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்கவும், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்க வேண்டிய நடவடிக்கைகளையும் ஆணையம் பரிந்துரைக்கும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.