ஜி20 மாநாட்டுக்கான இரவு விருந்து அழைப்பிதழில் ‘இந்திய குடியரசுத் தலைவர்’ என்பதற்கு பதிலலாக ‘பாரத் குடியரசுத் தலைவர்’ என்று அச்சிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
‘ஒருநாடு ஒரு தேர்தல்’, ‘சனாதனம்’ போன்ற அரசியல் சர்ச்சைகள் அடங்குவதற்குள், தற்போது ‘பாரத் குடியரசுத் தலைவர்’ எழுந்துள்ளது.
ஜி20 மாநாட்டில் கந்து கொள்ள வருபவர்களுக்கு வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகை இரவு விருந்து கொடுக்கிறது. அதில் பங்கேற்பவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத் குடியரசுத் தலைவர் என அச்சிடப்பட்டுள்ளது.
வழக்கமாக குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழில் இந்திய குடியசுரத் தலைவர் என்றே குறிப்பிடப்படும். ஆனால், தற்போது வழக்கத்திற்கு மாறாக இப்படி அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து வரும் அழைப்பிதழில் பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்பதற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.” தெரிவித்துள்ளார்.
இந்த பெயர் மாற்றத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அசாம் முதலமைச்சர் ஹிமானந்தா பிஸ்வாஸ்,”நமது நாகரிகம் அமுத காலத்தை நோக்கி முன்னேறி வருவதாக’ ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்தியா என்ற பெயரை ஆங்கிலேயர்கள் தான் வைத்தனர் என்று பாஜக கூறி வரும் நிலையில், இந்தப் பெயர் மாற்றம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.