பா.ஜ.க.வில் பிரதமர் பதவிக்கு மோடிக்குப் பதில் யார்யார் எனும் போட்டியில் மைய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயர் முன்னிலையில் உள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
நாக்பூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் இதைத் தெரிவித்தார்.
“ஒரு நிகழ்வை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. அரசியல் தலைவர் ஒருவர் என்னிடம் வந்து, ’நீங்கள் பிரதமராக ஆனால் நாங்கள் உங்களை ஆதரிப்போம்’ என்று கூறினார். அதை நான் நிராகரித்துவிட்டேன்.” என்று கட்கரி சொன்னார்.
மேலும்,” ஆனால் நான் அவரிடம் கேட்டேன், ’நீங்கள் ஏன் என்னை ஆதரிக்கவேண்டும்? நான் ஏன் உங்களின் ஆதரவை ஏற்கவேண்டும்? நான் ஏற்றுக்கொண்ட கொள்கை, அமைப்புக்கு விசுவாசமாக இருந்துவருகிறேன். எந்தப் பதவிக்காகவும் இதில் நான் சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை’... இதை அவரின் கூறிவிட்டேன்.” என்றார் கட்கரி.
முன்னதாக, கடந்த 2014, 2019 தேர்தல்களிலும் பிரதமர் பதவிக்கு கட்கரி முன்னிறுத்தப்படுவார் என்று பேசப்பட்டது. ஆர்.எஸ்.எஸ்.சின் வலுவான ஆதரவுடன் இருக்கும் அவர் மூன்று முறை, அதன் தலைமையகம் இருக்கும் நாக்பூர் மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார். தொடர்ந்து சாலைப் போக்குவரத்து அமைச்சராக 10 ஆண்டுகள் பதவிவகித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மோடிக்குப் பதிலாக 2019இல் கட்கரி நிறுத்தப்படுவார் எனப் பேச்சு எழுந்தபோது, “நாங்கள் மோடிக்குப் பின்னால் இருக்கிறோம். பிறகு எங்கே அவருக்குப் பதிலாக என்கிற கேள்வி வருகிறது?” என்று மறுத்தார் கட்கரி.