குடியரசு தலைவர் திரௌபதி முர்மு  
இந்தியா

9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்... புதுச்சேரிக்கு யார்?

Staff Writer

தெலங்கானா , பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கான புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இதேபோல புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் துணைநிலை ஆளுநராக கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சில மாநிலங்களில் புதிய ஆளுநர்களை நியமனம் செய்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, புதுச்சேரி மாநில புதிய துணை நிலை ஆளுநராக கே.கைலாசநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பை சி.பி.ராதாகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாப் ஆளுநராக பதவி வகித்து வந்த பன்வாரிலால் புரோகித்தின் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப், சண்டிகர் மாநிலத்துக்கான ஆளுநராக குலாப் சந்த் கட்டாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிக்கிம் ஆளுநராக இருந்த லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, அசாம் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் மணிப்பூர் ஆளுநராக அவருக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது,

ஜார்கண்ட் ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் மராட்டிய மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சந்தோஷ் குமார் கங்வார் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தான் ஆளுநராக ஹரிபாவ் கிசன்ராவ் பாக்டேவும், தெலுங்கானா ஆளுநராக ஜிஷ்ணு தேவ் வர்மாவும், சிக்கிம் மாநிலத்தின் புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும் நியமிக்கப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநில ஆளுநராக ராமன் தேகாவும், மேகாலயா ஆளுநராக சி.எச்.விஜயசங்கரும் நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசுத் தலைவர் மாளிகையின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே. கைலாசநாதன்

புதுச்சேரி ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே. கைலாசநாதன் யார்?

குஜராத் அரசின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றிய கே.கைலாசநாதன் என்பவர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 1953ஆம் ஆண்டு பிறந்த கைலாசநாதன் ஊட்டியில் வளர்ந்தவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முதுநிலைப் பட்டமும் வேல்சு பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர். கைலாசநாதன் இந்திய ஆட்சிப் பணியில் 1979 ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்று, உதவி ஆட்சியராக தனது வாழ்க்கைப்பயணத்தை தொடங்கினார். பல்வேறு இடங்களில் ஆட்சியராக இருந்துள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram