இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை பாம்பு இனம் 
இந்தியா

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு இனத்துக்கு டிகாப்ரியோ பெயர்!

Staff Writer

இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்பு இனத்திற்கு பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மேற்கு இமயமலைப் பகுதியில் விரேந்தர் பரத்வாஜ் என்பவர், புதிய வகை பாம்பு ஒன்றை கண்டுபிடித்தார். இதுவரை அடையாளம் காணப்பட்ட பாம்புகளைப் போல் இல்லாமல், வித்தியாசமான அம்சங்களைக் கொண்டிருந்த அந்த பாம்பின் புகைப்படங்களை இணையதளத்தில் அவர் வெளியிட்டார்.

இதையடுத்து அந்த பாம்பு எந்த வகையைச் சேர்ந்ததாக இருக்கும் என்பது தொடர்பான ஆய்வுகள் நடைபெற தொடங்கின. இந்த ஆய்வில், இது இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு புதிய வகை பாம்பு இனம் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். இது தொடர்பாக நடப்பாண்டின் தொடக்கத்தில் சயிண்டிபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. இது சர்வதேச நிபுணர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்டது.

இதன்படி, இந்த புதிய வகை இமாலய பாம்பு இனத்திற்கு ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரை குறிக்கும் விதமாக 'ஆங்குவிகுலஸ் டிகாப்ரியோய்' (Anguiculus dicaprioi) என்று பெயரிடப்பட்டுள்ளது.

உலகளாவிய காலநிலை மாற்றம், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சுழல் மாசுபாடு காரணமாக மனித உடலில் ஏற்படும் பிரச்சினைகள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து டிகாப்ரியோ தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் லியோனார்டோ டிகாப்ரியோவின் ஆர்வம் மற்றும் பங்களிப்பை போற்றும் வகையில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இமாலய பாம்பு இனத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.