நீட் தேர்வு (மாதிரி படம்) 
இந்தியா

நீட் தேர்வு: இதை முன்னரே செய்திருக்கலாம்!

Staff Writer

நீட், நெட் போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.

இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தோ்வை தேசிய தேர்வு முகமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒத்தி வைத்துள்ளது.

‘தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் முதுநிலை ‘நீட்’ தோ்வின் நடைமுறைகள் அனைத்தையும் முழுமையாக ஆய்வுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது; அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெறவிருந்த தோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும். இந்த முடிவால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமம் குறித்து சுகாதார அமைச்சகம் வருத்தப்படுகிறது. மாணவர்களின் நலன் கருதியும், தோ்வு நடைமுறையில் நோ்மையை பராமரிக்கவும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது’ என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நீட், நெட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 7 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தேசிய தேர்வு முகமையின் தலைவராக இருந்த சுபோத்குமார் சிங் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு, மய்யத்தின் புதிய புதிய தலைவராக பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக உள்ள அவருக்கு இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நீட் வினாத் தாள் கசிவுக்கு மூளையாக செயல்பட்ட ரவி அத்ரியை உத்தர பிரதேச போலீஸார் கைது செய்துள்ளனர்.

நீட் தேர்வுக்கு எதிராக நாடளவில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய தேர்வு முகமை முன்னரே விழிப்புடன் இருந்திருந்தால் இத்தனை குளறுபடிகள் ஆகியிருக்காது என்கிறனர் சமூக ஆர்வலர்கள்.