பாபா சித்திக் 
இந்தியா

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொலை… 2 பேர் கைது!

Staff Writer

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் மும்பையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பாபா சித்திக் மும்பையின் பாந்த்ராவில் உள்ள தனது மகனின் அலுவலகத்திற்கு காரில் சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.

இதில், மார்பு மற்றும் வயிற்றுப் பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பியோடிய மூன்றாவது நபரையும் தேடி வருகின்றனர்.

பாபா சித்திக்குக்கு கடந்த 15 நாள்களுக்கு முன்னர்தான் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது.

யார் இந்த பாபா சித்திக்?

பீகாரை சேந்த சித்திக் மாணவராக இருந்தபோதே காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய தேசிய மாணவர் அமைப்பில் சேர்ந்தார். பின்னர் மும்பை மாநகராட்சியின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வந்தே மேற்கு சட்டமன்ற தொகுதியிலிருந்து மூன்று முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாநில அமைச்சரவையிலும் அங்கம் வகித்துள்ளார்.

40 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் கட்சியிலிருந்த பாபா சித்திக் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஆண்டுதோறும் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அனைத்து மதத் தலைவர்கள், அரசியல் கட்சியினர், பாலிவுட் பிரபலங்களை வரவழைத்து மிக பிரம்மாண்டமாக நடத்துவதை வழக்கமாக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்சிபி தலைவர் பாபா சித்திக் படுகொலை சம்பவத்தில் நீதி உறுதி செய்யப்பட வேண்டும். மகாராஷ்டிரா அரசு வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தல்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram