நவீன் பட்நாயக், பிஜூ ஜனதா தளம் 
இந்தியா

போனில் நலம் விசாரித்திருக்கலாமே, மோடி?- ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேள்வி!

Staff Writer

பத்து ஆண்டுகளாக பா.ஜ.க.வினர் என்னுடைய உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிவருகின்றனர்; நல்ல நண்பரான எனக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்து பேசியிருக்கலாமே என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் எதிர்க் கேள்வி கேட்டுள்ளார்.

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவைத் தேர்தலும் நடத்தப்படுகிறது. நாளைமறுநாள் கடைசிக் கட்டமாக ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு பா.ஜ.க. தரப்பில் கடுமையான முறையில் பிரச்சாரம் செய்துவருகின்றனர்.

ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் அரசியல் வாரிசாக தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் பிஜூ ஜனதா தளம் கட்சிக்கு தீவிரமாக வாக்குச்சேகரித்து வருகிறார். பா.ஜ.க.வுக்கு அவர் சவாலாக இருக்கும்நிலையில், பிரதமர் மோடியும் மைய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அவரின் பெயரைக் குறிப்பிடாமல், பூரி ஜெகநாதர் ஆலயப் பொக்கிச அறையின் சாவியை தமிழ்நாட்டவர் திருடிக்கொண்டு போய்விட்டதாக பூடகமாக பிரச்சாரத்தில் பேசினார்கள்.

பிரதமர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் இப்படியா பேசுவது என முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்தும் அமித்ஷா அதே விவகாரத்தை இன்னும் ஒரு படி மேலே போய், ஒடிசாவை தமிழர் ஆள்வதா என பல முறை இனரீதியாக உசுப்பேற்றிப் பேசிவருகிறார்.

இந்த நிலையில், நேற்றுமுன் தினம் பிரச்சாரத்தின்போது, முதலமைச்சர் நவீனின் கை ஓர் இடத்தில் நடுங்கியதைப் போலவும் அதை வி.கே.பாண்டியன் மறைப்பதைப் போலவும் ஒரு காணொலியை வெளியிட்டு, அவருடைய உடல்நிலை மோசமாகிவிட்டதாகவும் பாண்டியன் அதை மறைப்பதாகவும் மாநில பா.ஜ.க. நிர்வாகி பேசினார்.

அதைப் பிடித்துக்கொண்டு நேற்று பாரிபடாவில் பேசிய பிரதமர் மோடி, நவீன் உடல்நிலை மோசமடைந்ததைப் பற்றி ஜூன் 10ஆம் தேதிக்குப் பிறகு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று பேசியது அடுத்தகட்டப் பரபரப்பை உண்டாக்கியது.

மோடி பேசியதைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் நவீன் பட்நாயக் தன்னுடைய பதிலைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே நவீனை தன்னுடைய நல்ல நண்பர் என மோடி குறிப்பிட்டிருந்த நிலையில், நவீன் நேற்று அளித்த பதிலில், ”பிரதமர் மோடிக்கு என் மேல் அக்கறை இருக்குமானால், நல்ல நண்பரான என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கலாமே? இப்போது மட்டுமில்லை பா.ஜ.க.வினர் கடந்த பத்து ஆண்டுகளாகவே வதந்தியைப் பரப்பிவருகின்றனர். நான் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறேன். ஒரு மாதமாக இந்த வெயிலிலும் பிரச்சாரம் செய்துவருகிறேன். மோடி இதைப் போன்ற வதந்திகளை நம்புவதற்குப் பதிலாக, பா.ஜ.க.வினர் வதந்தி பரப்பியதைப் பற்றி விசாரணை நடத்தலாம்.” என்று சுருக்கெனக் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதில் சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.