வயநாடு மொய்டு 
இந்தியா

வீட்டையே சகதி மூழ்கடித்தும்... மனம் கலங்காமல் மகள், பேரனுடன் தப்பிய வயநாடு மொய்டு!

Staff Writer

வயநாடு முண்டக்கையில் வீடு முழுவதையும் தண்ணீரும் சகதியுமாக மூழ்கடிக்க, ஒரு முதியவர் தன் மகளையும் பேரனையும் காப்பாற்றி உயிர்பிழைக்க வைத்த சம்பவம், நெகிழ்ச்சியையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

இதுகுறித்து மனோரமா ஊடகம் விரிவானதொரு செய்தியை வெளியிட்டுள்ளது.

வயநாடு, முண்டக்கை கிராமத்தில் திங்கள் இரவு நிலவரப்படி இரண்டு நாள்களுக்கு தொடர் மழை எச்சரிக்கை...!

அந்த ஊரில் உள்ள மற்ற வீடுகளைப் போல, மொய்டு ஓணப்பரம்பன் என்பவரின் வீட்டிலும் இரண்டு மணி நேரமாக மின்சாரம் இல்லை. இடைவெளி விட்டுப் பெய்யத் தொடங்கிய மழை, அந்த வட்டாரத்தையே சிறிது நேரத்தில் வெள்ளக் காடாக மாற்றிவிட்டிருந்தது.

ஆனால், ஊரார் பெரும்பாலானவர்களைப் போல அறுபது வயது மொய்டுவுக்கும், ’கொஞ்சம் பிந்திப் பெய்யும் தென்மேற்குப் பருவமழைதானே.. என்ன செய்ய!’ என்கிற நினைப்பு இருந்திருக்கலாம். எத்தனையோ பேரைப் போல, அவரும், வரப்போகும் வரலாற்றுப் பேரிடரை நினைத்துக்கூடப் பார்க்காமல் தூங்கத்தொடங்கி இருந்தார்.

பெரும் சத்தத்தை உண்டாக்கிய மழையால் அவருடைய வீடு இருந்த பகுதிக்கு மேலே உள்ள மலைப்பகுதியில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. நேர்ப்பார்வையாகப் பார்த்தால் சரியாக அவருடைய வீட்டுக்குப் பின்னால் இருந்த மலை பிளவு கண்டது.

தூங்கிக்கொண்டு இருந்த மொய்டுவின் படுக்கை திடீரெனச் சில்லென்று ஆனதும், அடித்துப்பிடித்து எழுந்து உட்கார்ந்தார். தன்னைச் சுற்றிலும் எப்போதுமில்லாத கடும் குளுமை ஏற்பட்டதும் அவர் கலவரமானார். என்ன ஏதென யோசித்து முடிப்பதற்குள் அவருடைய மெத்தையைத் தண்ணீர் மூழ்கடித்துவிட்டது.

கொடுங்கனவு போல நிகழ்ந்த அந்த நேரத்து அதிர்ச்சி அடைந்தவர், அடுத்த அறையில் உதவிகேட்டு அலறிய தன் மகள் ராம்சீனா, பேரன் இருவரையும் நோக்கி ஓடினார்.

வீடு முழுவதும் வெள்ளநீர் புகுந்துவிட்டது. நீர்மட்டம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. அவர் படுக்கையறையிலிருந்து நகர்ந்து சமையலறைப் பக்கம் போய்ப் பார்த்தார். முன்பக்கக் கதவு, சன்னல்கள் வழியாக வெள்ளம் வீட்டுக்குள் வந்திருந்தது அவருக்குத் தெளிவாகப் புரிந்தது.

அடுத்து மகளின் அறைக்குள் செல்ல...

தன் மகனுடன் மெத்தையின் மீது நின்றபடி ராம்சீனா அலறிக்கொண்டிருந்தார். அவருடைய கையில் இருந்த குழந்தை தாயைவிட பயங்கரமாக அலறினான். மனம் கலங்கிப்போன மொய்டு, பாய்ந்துபோய் இருவரையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டார்.

வீட்டுக்குள் வந்துகொண்டிருந்த வெள்ளநீர் மட்டம் வேகமாக உயர்ந்து மொய்டுவின் நெஞ்சுவரை வந்துவிட்டது. அதையும்தாண்டி தண்ணீர் வீட்டுக்குள் வந்து, அவர்களை மூழ்கடிக்கும்படியாக சுற்றிச் சுழன்றது. தண்ணீர்வரத்து குறையும்வரை வீட்டைவிட்டு நகரமுடியாது என்பது அவருக்கு உறுதியானது.

எப்படியோ அந்த மனிதர் தனக்கிருந்த சக்தியை எல்லாம் திரட்டி கூரையின் மீதிருந்த சீலிங் ஃபேனை ஒரு கையில் பிடித்துக்கொண்டார். மொய்டு பேரனை இன்னொரு கையில் ஏந்திக்கொள்ள, அவரின் மகள் தந்தையின் தோள்பட்டையைப் பிடித்துக்கொண்டார்.

அப்போதுதான் அடுத்த சோதனை...

தண்ணீரைப் போல ஏராளமாக சகதி வீட்டுக்குள் வரத் தொடங்கியது.

மூவருமே மூச்சுவிட சிரமப்பட்டனர். அவ்வளவுதான் கதை முடிந்தது என அவர்கள் முடிவுக்கு வந்தார்கள்.

இலேசாக நீர்வரத்து குறையத் தொடங்கியது. உடனே மொய்டு பேரனை அப்படியே ஒரு கையில் பிடித்தபடி வீட்டின் பின்பக்கக் கதவை நோக்கி நீந்தத் தொடங்கினார்; ராம்சீனாவும் அப்பாவுடன் அப்படியே ஒட்டிக்கொண்டார்.

வீட்டின் பின்பக்கமாக வெள்ளநீர் அளவு நெஞ்சு உயரத்துக்கு இருந்தது. ஆனால் வீட்டுக்குள் வரும் வெள்ளம் முன்னைவிட வேகமாகவும் வலுவாகவும் இருந்தது. அதில் அவர் உடுத்தியிருந்த கைலி அடித்துச்செல்லப்பட்டது.

அதைப் பொருட்படுத்தாமல் பேரனைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருவரையும் எப்படியோ சாலைக்குக் கொண்டுவந்துவிட்டார், மனிதர்.

சாலைக்கு வந்தபோதுதான் அரை நிர்வாணமாக இருந்ததைப் பற்றி யோசிக்கவே அவரால் முடிந்தது. நல்லவேளையாக அந்த நேரம் பார்த்து அங்கு ஜீப்பில் வந்தவர்கள் அவர் கட்டிக்கொள்ள ஒரு துண்டைக் கொடுத்தார்கள்.

இந்த சம்பவங்கள் எல்லாமே, ஏதோ ஒரு திரைப்படத்தில் வருவதைப் போல, மொய்டுவின் குடும்பத்துக்கு மொத்தமும் கெட்ட கனவுபோல இருந்தது.

தங்கள் வீட்டுக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர்கள் ஒரு முறைகூட அந்தப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்களே; அதைப் போல இன்னொரு கதை!

நல்ல வேளையாக அந்தக் கொடும் இரவில் மொய்டுவின் மனைவி கதீஜாவும் அவர்களின் மூத்த மகளும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்ததால் தப்பித்தார்கள்.

மகளின் வயிற்று வலிக்காக சிகிச்சை எடுத்துவந்த அவர்களை முந்தைய நாளே வீட்டுக்கு அனுப்புவதாக இருந்திருக்கிறது. ஆனால் வலி தீராததால் மேலும் ஒரு நாள் அவர்களை மருத்துவர்கள் இருக்கச்சொல்லிவிட்டார்கள்.

அதனால் அவர்கள் இரண்டு பேரும் பெரும் மனக் காயத்தைத் தந்திருக்கக்கூடிய சூழலில் சிக்காமல் தப்பித்தார்கள்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram