சமீபத்தில் ரஷ்யா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டில் உயர்ந்த விருதான ’அப்போஸ்தலர் புனித ஆண்ட்ரூ விருது’ வழங்கி சிறப்பித்தார் ரஷ்ய அதிபர் புடின். 2019-ஆம் ஆண்டே இந்த விருது அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும் இப்போதுதான் வழங்கப்பட்டது.
ரஷ்யா, இந்தியா இடையிலான சிறப்பான நல்லுறவை பேண உழைத்ததற்காகவும் இருநாட்டு மக்களிடையே நட்பை வளர்த்ததற்காகவும் இவ்விருது வழங்கப்பட்டது. ரஷ்யாவின் மிக உயரிய விருதாகும் இது.
புனித ஆண்ட்ரூ என்பவர் ஏசுவின் 12 சீடர்களில் ஒருவர். ஏசு சிலுவையில் அறையப்பட்டதும் அவரது சீடர்கள் தொலை தூரங்களுக்குச் சென்று அவரது நற்செய்தியைப் பரப்பினர். ஆண்ட்ரூ ரஷ்யாவுக்குச் சென்றார். அங்கே அவரால் உருவாக்கப்பட்டதே கான்ஸ்டாண்டினோபிள் திருச்சபை. பின்னர் அதுவே ரஷ்ய பழமைவாத திருச்சபை ஆனது. இதைத்தான் ரஷ்யாவில் உள்ள 140 மில்லியன் பேரில் 90 மில்லியன் பேர் பின் பற்றுகின்றனர்.
புனித ஆண்ட்ரூ ரஷ்யாவுக்கு மட்டுமல்லாமல் ஸ்காட்லாண்டுக்கும் பாதுகாவலராகக் கருதப்படுகிறார். 1698-இல் ரஷ்யாவை ஆண்ட மகாபீட்டர் காலத்தில் இந்த விருது உருவாக்கப்பட்டது. 1918-இல் ரஷ்ய புரட்சிக்குப் பிறகு இந்த விருது வழக்கம் நிறுத்தப்பட்டது.
ஆனால் 1998-இல் இருந்து மீண்டும் வழங்கப்படுகிறது.
ரஷ்யாவின் புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த விருதைப் பெற்றுள்ளனர். ஏகே 47 துப்பாக்கி வடிவமைப்பாளர் மைக்கேல் கலாஷ்நிக்கோவ், மைக்கேல் கோர்பச்சோவ், சீன அதிபர் ஜின்பிங் போன்றோருக்கு இது வழங்கப்பட்டுள்ளது. ரஷ்ய இந்திய உறவுகள் மேலும் மேம்பட்டிருக்கும் நிலையில் இவ்விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் உக்ரைன் போரில் ரஷ்யா தீவிரமாக இருக்கையில் இவ்விருது அளிக்கப்பட்டது உற்றுக்கவனிக்கப்படுகிறது.