பீகார் மாநிலத்தில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பிரதமர் மோடி மீண்டும் முதலமைச்சராக ஆவார் என்று பேசியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
குஜராத்தில் மோடி முதலைமைச்சராக இருந்தபோது பீகாரில் நிதிஷ்குமார் முதலமைச்சராக இருந்திருக்கிறார். பின்னர் பா.ஜ.க.வின் வாஜ்பாயி அமைச்சரவையிலும் நிதிஷ் பதவிவகித்துள்ளார். இடையில் பல ஆண்டுகள் அவர் பா.ஜ.க. கூட்டணியில் இல்லாமல் இப்போது மீண்டும் அதே கூட்டணியுடன் மக்களவைத் தேர்தலைச் சந்திக்கிறார்.
அவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் பா.ஜ.க.வும் பீகாரில் கூட்டணிவகித்துப் போட்டியிடும் நிலையில், பாட்னாவில் நேற்று தற்போதைய எம்.பி. ரவிசங்கர் பிரசாத்துக்கு வாக்குகேட்டு நிதிஷ் பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, “ நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக என்னுடைய வாழ்த்துகள்.” என்று அவர் கூறியதும், மேடையில் இருந்த அனைத்து தலைவர்களும் கண நேரம் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.
ஏற்கெனவே, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பா.ஜ.க.வுக்குள் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் போட்டி நடப்பதாக கூறிவரும்நிலையில், நிதிசின் இந்தப் பேச்சால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சி அடைந்ததில் வியப்பு இல்லை.
உடனடியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் சஞ்சய்குமார் ஜா நாற்காலியிலிருந்து எழுந்து, நிதிசிடம் இதைச் சுட்டிக்காட்டினர். சுதாரித்த நிதிஷ், “ஏற்கெனவே மோடி பிரதமராகத்தான் இருக்கிறார்.” என்றதுடன், இந்த முறை 400 இடங்களுக்கு மேல் வென்றுகாட்டுவார் என்று பேசிமுடித்து, கூட்டத்துக்கு வந்திருந்தவர்களை சகஜத்துக்குக் கொண்டுவந்தார்.
ஆனாலும், எதிர்க்கட்சியினர் நிதிசின் இந்தப் பேச்சை எடுத்து வெளியிட்டு சமூக ஊடகங்களில் பரவலாக்கி வருகின்றனர்.