வார இறுதி நாள்களில் தனிமையைப் போக்குவதற்காக மைக்ரோசாப்ட் தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் ஆட்டோ ஓட்டுவது வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூரில் தொழில்நுட்ப துறையில் வேலை பார்க்கும் சிலர் வார இறுதி நாட்களில் பைக் டாக்சி, ஆட்டோ ஓட்டுபவர்களாக மாறுவது ஒன்றும் புதிதல்ல. சில தொழில்நுட்ப வல்லுநர்கள் உணவு விநியோகம் செய்யும் வேலையில் ஈடுபடுகின்றனர்.
அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் பெங்களூரில் நடந்துள்ளது. சீனியர் மைக்ரோசாப்ட் பொறியாளராக வேலை பார்க்கும் ஒருவர், வார இறுதி நாள்களில் தனிமையை போக்குவதற்காக ஆட்டோ ஓட்டுவது வைரலாகி உள்ளது.
அந்த பொறியாளரின் ஆட்டோவில் சென்ற நபர் ஒருவர், அவரை பின்னிருந்து புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ’35 வயதான மைக்ரோசாப்ட் பொறியாளர் ஒருவர் வார இறுதி நாள் தனிமையைப் போக்குவதற்காக கோரமங்களாவில் ஆட்டோ ஓட்டுகிறார்’ என பதிவிட்டுள்ளார். இதற்கு கமெண்ட்ஸ் போட்டுள்ளவர்கள் பொறியாளரின் செயலுக்கு பாராட்டும் வருத்தமும் தெரிவித்துள்ளனர்.
இப்படி ஐடி துறையில் வேலை பார்ப்பவர்கள், கூடுதல் வருமானத்துக்காகவோ, தனிமையைப் போக்குவதற்காகவோ வார இறுதி நாள்களில் பைக் டாக்சி, ஆட்டோ ஓட்டுவது வாடிக்கையாகி வருகிறது. ராபிடோ பைக் ஓட்டிக் கொண்டிருந்த ஐடி நிறுவன ஊழியர் பற்றிய செய்தியும் ஏற்கெனவே வெளியானது.