மாதவிடாய் பிரச்னைகள்  
இந்தியா

‘மாதவிடாய்- ஒரு நாளாவது விடுமுறை கொடுங்களேன்!’

Staff Writer

நாடளவில் எழுந்துள்ள விவாதத்தைத் தொடர்ந்து, மாதவிடாய் விடுமுறை பற்றி கர்நாடக அரசும் ஆலோசனையில் இறங்கியுள்ளது.

தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்பம், ஆயத்த ஆடை உற்பத்தி, பன்னாட்டு நிறுவனங்கள் என இலட்சக்கணக்கில் பணியாற்றும் பெண்களுக்கு மாதம் ஒரு முறை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கலாமா என்பது கர்நாடக மாநில அரசின் யோசனை!

இது தொடர்பாக ஆராய்ந்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக, கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் சட்டப்பள்ளித் தலைவர் பேராசிரியர் சப்னா மோகன் தலைமையில் 18 பேர் கொண்டு குழுவை அம்மாநில தொழிலாளர் நலத் துறை அமைத்துள்ளது.

கடந்த ஜனவரியில் அமைக்கப்பட்ட இந்தக் குழு ஒரு சுற்று கலந்துரையாடலை நடத்தி முடித்திருக்கிறது. அதில் மாறுபட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குழுவில் இடம்பெற்றுள்ள பெண்கள் பலரும் அரசின் இந்த முயற்சி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் மாதவிடாய் விடுமுறையை சட்டபூர்வமானதாக ஆக்க உதவும் என்கிறார்கள்.

இதை அரசுத் துறைக்கும் விரிவுபடுத்த முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார், இன்னொரு உறுப்பினர். குறிப்பாக, ஆசிரியர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், அங்கன்வாடி ஊழியர்கள், ஆசா திட்டப் பணியாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு!

மாதம் ஒரு முறை விடுமுறை என்பது கட்டாயமானால், பெண்களைப் பணிக்கு வைத்துக்கொள்ள தொழில்துறை தரப்பினர் தயங்குவார்கள்; இதன்மூலம் அவர்களுக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்றும் ஒரு கருத்து கூறப்பட்டுள்ளது.

மாதவிடாய்க் காலத்தில் வேலைக்கு வந்தாகவேண்டிய கட்டாயத்தில் பணிக்கு வருபவர்கள், வந்ததற்காக பணியில் இருக்கிறார்களே தவிர, அந்த நாள்களின் உடல், மன அவதியால் அவர்களால் ஈடுபாட்டுடன் வேலையைச் செய்ய முடிவதில்லை என்பதும் பேசப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விடுமுறை நடைமுறைக்கு வரும்போது ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றும் 4 இலட்சம் பெண்கள் பெரிய அளவில் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பத்து நாள்கள் பொது விடுமுறை உள்ள நிலையில், அதிகபட்சமாக 15 நாள்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை கிடைக்கக்கூடும்.

உலகின் பல நாடுகளில் மாதவிடாய் விடுமுறை கட்டாயமாக ஆக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளிலோ குழந்தைப் பேறுக்குத் தடையாக அமைந்துவிடக்கூடாது எனும் அக்கறையுடன், தாய்மையைப் பாதுகாக்கும் ஒன்றாகவும் மாதவிடாய் விடுமுறை கருதப்படுகிறது.

உலக அளவில் ரசியாவில்தான் முதலில் மாதவிடாய் விடுமுறைக்கான முயற்சிகள் தொடங்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.

நாடளவில் பீகாரில் 1992ஆம் ஆண்டில் உயிரியல் விடுமுறை என மாதத்துக்கு இரண்டு நாள்கள் வழங்கப்பட்டுள்ளது. கேரளத்தில் கடந்த ஆண்டு பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறைச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

முந்தைய மோடி ஆட்சியில் கடந்த ஆண்டில் மகளிர் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, பெண்களைப் பாகுபடுத்துவதாகக் கூறி இந்த விடுமுறைக் கருத்தை நிராகரித்தார்.

நாடாளுமன்றத்தில் தனி நபர் மசோதாக்களாக கரூர் எம்.பி. ஜோதிமணி உட்பட மூன்று பேர் தாக்கல்செய்தனர். ஆனால் ஒன்றும் சிறு தொடர் விளைவைக்கூடத் தரவில்லை.

கர்நாடக மாநில அரசுக்கு இந்தக் குழு பரிந்துரையை அளித்தபிறகு, அதன் சாதக, பாதகங்களை ஆய்ந்து முடிவு எடுக்கப்படும் என்கிறார், அந்த மாநில சட்டத் துறை அமைச்சர் சந்தோஷ் லாடு.

கீதா இளங்கோவன், ஆவணப்பட இயக்குநர்- எழுத்தாளர்

தமிழ்நாட்டிலும் மாதவிடாய் விடுமுறை அளிக்கவேண்டும் என்கிறார்கள், பெண்ணுரிமை அமைப்பினர்.

”குறைந்தபட்சம் ஒரு நாளாவது மாதவிடாய் விடுமுறை விடப்படவேண்டும். இரண்டு நாள் விடுமுறை வரவேற்புக்குரியது. ஆனால் எல்லா அலுவலகங்களாலும் தரமுடியுமா என்பது தெரியவில்லை.” என்கிறார் ‘மாதவிடாய்’ ஆவணப்பட இயக்குநரும் பெண்ணிய எழுத்தாளருமான கீதா இளங்கோவன்.

அதேசமயம், விடுமுறை விட்டதுடன் கடமை முடிந்தது என இல்லாமல் அடிப்படை வசதிகளைச் செய்துதர வேண்டும் என்றும் இவர் வலியுறுத்துகிறார்.

” இதை இரண்டு விதமாக அணுகவேண்டும். மாதவிடாயின்போது வயிற்றுவலியாலும் அதிக ரத்தப்போக்காலும் கஷ்டப்படும் பெண்களுக்கு அரசும் தனியார் நிறுவனங்களும் கட்டாய விடுமுறை அளிக்கவேண்டும். இன்னொரு வகை, மாதவிடாயின்போது கஷ்டப்பட்டாலும் அதைச் சமாளித்து வேலைக்கு வருகிறேன் என வரும் பெண்களுக்கு கழிப்பிட வசதி, நாப்கின்களை அகற்றும் வசதி, அவர்கள் தேவையையொட்டி சிறிதுநேரம் ஓய்வெடுப்பதற்கான ஓய்வறை வசதி ஆகியவற்றை அனைத்து பெண்களின் பணியிடங்களிலும் உறுதிசெய்ய வேண்டும். அரசு இதற்கான சட்டம் ஒன்றைக் கொண்டுவரவேண்டும்.” என அழுத்தமாகச் சொல்கிறார், எழுத்தாளர் கீதா.