மத்திய அமைச்சர் அமித் ஷா 
இந்தியா

‘மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது; அதை அரசியலாக்குவது இன்னும் வெட்கக்கேடானது’ – மத்திய அமைச்சர் அமித் ஷா

Staff Writer

“மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது, அதை அரசியலாக்குவது இன்னும் வெட்கக்கேடானது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில், எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் பதில் அளித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாட்டு மக்களை தவறாக வழிநடத்தவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

பாஜக இரண்டு முறை பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு மிகவும் பிரபலமான பிரதமரும், அதிகம் விரும்பப்படும் பிரதமரும் மோடிதான். இதை நான் சொல்லவில்லை. பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல், ஒரு நாளைக்கு 17 மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார் பிரதமர். அவர் மீது மக்களோ நாடாளுமன்றமோ அவநம்பிக்கை கொள்ளவில்லை. இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிக்கவில்லை.

கடந்த 9 ஆண்டுகளில் மிக முக்கியமான 50 முடிவுகளை இந்த அரசு எடுத்துள்ளது. விவசாயிகளுக்கு நாங்கள் இலவசங்களை வழங்கவில்லை; அவர்களை தன்னிறைவு அடையச்செய்துள்ளோம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஒரு முறை சொன்னார், அரசு மக்களுக்கு 1 ரூபாய் கொடுக்கிறது என்றால், அதில் 15 பைசா தான் மக்களுக்கு சென்றடைகிறது என்றார். ஆனால், இன்று முழுமையாக சென்று சேர்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும்.

எங்கள் கொள்கையால் காஷ்மீரின் நிலை மாறிவிட்டது.காஷ்மீரை பயங்கரவாதம் இல்லாத மாநிலமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.

மணிப்பூரில் நடந்த இனக் கலவரம் நடந்ததாக எதிர்க்கட்சிகள் கூறுவதை ஏற்றுக் கொள்கிறேன். மணிப்பூர் வன்முறை வெட்கக்கேடானது, அதை அரசியலாக்குவது இன்னும் வெட்கக்கேடானது.” என்றார்.