உச்சநீதிமன்றம் 
இந்தியா

மணிப்பூர் விவகாரம்; 3 பெண் நீதிபதிகள் கொண்ட குழு அமைப்பு!

Staff Writer

வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மணிப்பூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளை பார்வையிட உயர்நீதிமன்ற 3 முன்னாள் பெண் நீதிபதிகள் குழுவை அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை தொடர்பாக தாமாக முன் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் கடந்த 1ஆம் விசாரணைக்கு வந்தது. அப்போது மணிப்பூர் அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.

மாநில அரசின் செயல்பாடுகள் மீது அதிருப்தி கொண்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திர சூட், மணிப்பூர் மாநில டிஜிபி உச்ச நீதிமன்றத்தில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கானது இன்று நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மணிப்பூர் மாநில டிஜிபி நேரில் ஆஜரானார். இன்றைய வழக்கு விசாரணையின் போது நீதிபதி விரிவாக விசாரணை மேற்கொண்டார். அப்போது மனுதாரர்கள் தரப்பில் இருந்து ஏராளமான வழக்கறிஞர்கள் ஆஜராகி இருந்தார்கள். அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் மணிப்பூர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சிபிஐ விசாரணைக்கு வழக்குகளை மாற்றியது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மணிப்பூர் விவகாரத்தில் முன்னாள் நீதிபதி கீதா மிட்டல் தலைமையில் முன்னாள் நீதிபதிகள் ஷாலினி ஜோஷி, ஆஷா மேனன் ஆகியோர் அடங்கிய 3 பேர் கொண்ட குழு அமைத்து, மணிப்பூரில் நிவாரணப் பணிகளைப் பார்வையிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.