தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றங்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. நிர்பயா சம்பவத்திற்குப் பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு தண்டனைகள் கடுமையாக்கப்பட்டாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளி விவரப்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களில் 32 சதவீதம் டெல்லியில் நடப்பதாக தெரிவிக்கிறது.
இப்படியான நிலையிலேயே, டெல்லியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நேற்று முன்தினம் நடந்தேறியுள்ளது. வடக்கு டெல்லியின் ரோஹிணி ஷாபாத் பால் பண்ணை பகுதியில், மக்கள் நடமாட்டம் இருந்த இடத்தில், இளைஞர் ஒருவருக்கும் 16-வயது சிறுமி ஒருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த இளைஞன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்தப் பெண்ணை 34 முறை குத்தியுள்ளான். தாக்குதலில் நிலைகுலைந்த அந்தப் பெண் சுவர் மீது சரிந்து விழ, தலையில் கல்லைப் போட்டுள்ளார் அந்த இளைஞன். இவ்வளவு பெரிய கொடூர சம்பவத்தை அவ்வழியாக சென்ற யாரும் தடுக்க முன்வரவில்லை. பலர் இசசம்பவத்தை வீடியோ பதிவு மட்டும் செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் வெளியாகி அதிரவைத்த நிலையில், டெல்லி காவல் துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சிசிடிவி காட்சிகளை வைத்து, கொலை செய்த இளைஞனின் அடையாளத்தை உறுதிப்படுத்திய காவல் துறையினர், கொலையாளியை உத்தர பிரதேசத்தில் நேற்று கைது செய்தனர். விசாரணையில், அந்த இளைஞன் பெயர் ஷாஹில் (வயது-20) என்பதும், அவர் ஏ.சி. மெக்கானிக்காக வேலைப் பார்த்ததும் தெரியவந்தது. உயிரிழந்த சிறுமியின் பெயர் சாக்ஷி. அவரின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஷாஹில் மீது ஐபிசி 320 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொலைசெய்யப்பட்ட சிறுமி சாக்ஷியும், ஷாஹிலும் கடந்த இரண்டு வருடமாக பழகிவந்துள்ளனர். சில நாட்களாக சாக்ஷி ஷாஹிலுடன் சரியாக பேசவில்லை என்று தெரிகிறது. அதேபோல், சாக்ஷி வேறு ஒரு நபருடன் பழகியதும் ஷாஹிலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுவே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சாக்ஷியின் நண்பர்கள் காவல் துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர். கொலைக்கு ஒருநாள் முன்னர்தான் இருவருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. ஷாஹிலின் நண்பரின் குழந்தைக்குப் பிறந்தநாள் விழா நடந்தது. அதில், கலந்துகொள்வதற்காக சாக்ஷி செல்லும் போதே, அவரை வழிமறித்து ஷாஹில் கொலை செய்துள்ளார்.
கொலை நடந்த அரை மணி நேரம் கழித்தே காவல் துறையினர் அப்பகுதிக்கு வந்துள்ளனர். உறவு தொடர்பான பிரச்னையின் காரணமாக இந்த கொலை நடைபெற்றதாக தெரிந்தாலும், கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கொலை செய்வதற்கு ஷாஹில் பயன்படுத்திய கத்தியை காவல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்கவில்லை.