நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 ISRO
இந்தியா

பூமியிலிருந்து புறப்பட்டது முதல் சந்திராயன்-3... நடந்தது என்ன?

Staff Writer

நாற்பத்தொரு நாள்கள் பயணத்துக்குப் பிறகு, இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலம் இன்று மாலை நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

பூமியிலிருந்து புறப்பட்டது முதல் நிலவில் தரையிறங்கியதுவரை நடந்தது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

ஜூலை 14: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்திலிருந்து எல்விஎம்3 ராக்கெட் மூலம் சந்திராயன்-3 விண்கலம் பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஜூலை 15: பூமியைச் சுற்றிவந்த சந்திரயான்-3 விண்கலத்தின் முதல் பாதை உயர்த்தல் மேற்கொள்ளப்பட்டது. 173 கி.மீ x 41762 கி.மீ தொலைவுடைய நீள்வட்டப் பாதையில் விண்கலம் செலுத்தப்பட்டது.

ஜூலை 17: இரண்டாவது முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை உயர்த்தப்பட்டு, 226 கி.மீ. x 41603 கி.மீ. தொலைவு கொண்ட பாதைக்கு மாற்றியமைக்கப்பட்டது.

ஜூலை18: மூன்றாவது முறையாக சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயரம் உயர்த்தப்பட்டது.

ஜூலை 20: நான்காவது முறையாக சந்திரயான்-3 விண்கலத்தின் பாதை உயர்த்தப்பட்டது.

ஜூலை 25: ஐந்தாவது முறையாக சுற்றுவட்டப்பாதை அதிகரிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 236 கிலோமீட்டராகவும் அதிகபட்சம் 1,27,063 கிலோ மீட்டராகவும் சுற்றுவட்டப் பாதை மாற்றி அமைக்கப்பட்டது.

புவியீர்ப்பிலிருந்து விடுபட்டு...

ஆகஸ்ட் 1: புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திராயன் விண்கலம் விலக்கப்பட்டு, நிலவை நோக்கி பயணம் செய்யும்படி தள்ளப்பட்டது.

நிலவின் சுற்றுப்பாதைக்குள்

ஆகஸ்ட் 5: சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் நீள்வட்டப் பாதைக்குள் செல்லவைக்கப்பட்டது. முதலில், 164 கி.மீ x 18074 கி.மீ தொலைவுடைய சுற்றுவட்டப் பாதைக்குள் அது சுற்றிவரும்படி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 6: அடுத்ததாக, நிலவின் சுற்றுப்பாதையில் முதல் முறையாக விண்கலத்தின் சுற்றுப்பாதை உயரம் குறைக்கப்பட்டது. அதாவது, 170 கி.மீ x 4313 கி.மீ சுற்றுப்பாதைக்கு சந்திரயான்-3 மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 9: விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதையானது 174 கிமீ x 1437 கிமீ சுற்றுவட்டப் பாதையாகக் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 14: அடுத்த கட்டமாக, 151 கி.மீ. x 179 கி.மீ. என்ற நீள்வட்டப் பாதையில் சுற்றும்படி பாதை மேலும் குறைக்கப்பட்டது.

ஆகஸ்ட் 16: நான்காவது முறையாக, 153 கி.மீ x163 கி.மீ. என்ற நீள்வட்டப் பாதையில் சந்திரயான்-3 மாற்றிவிடப்பட்டது.

ஆகஸ்ட் 17: சந்திராயன்-3 விண்கலத்தின் உந்து கலனிலிர்ந்து தரையிறங்கும் விக்ரம் லேண்டர் கருவி வெற்றிகரமாக தனியாகப் பிரிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 19: தரையிறங்கு கருவியான விக்ரம் லேண்டர் 113 கிமீ x 157 கிமீ என்ற சுற்றுவட்டப்பாதையில் நிலவை சுற்றத் தொடங்கியது.

ஆகஸ்ட் 20: லேண்டரானது மேலும் சுற்றுவட்டத்தைக் குறைத்து 25 கிமீ x 134 கிமீ என்ற வட்டப் பாதையில் நிலவை சுற்றத் தொடங்கியது.

ஆகஸ்டு 21: ஏற்கெனவே நிலவுக்கு அனுப்பப்பட்டு தோல்வியடைந்த சந்திராயன்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருக்கும், சந்திராயன்-3 விக்ரம் தரையிறங்கு கலனுக்கும் இடையே தகவல்தொடர்பு வெற்றிகரமாக செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 23: திட்டமிட்டபடி, மாலை 5.44 மணிக்கு தரையிறக்கும் பணி தொடங்கி, 6.03 மணிக்கு நிலவின் தென் துருவப் பகுதியில் விக்ரம் லேண்டர் கருவி பத்திரமாகத் தரையிறங்கியது.