வீடு தேடி ரேசன் பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பதாக பல அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகள் அளித்திருக்கின்றன. தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் வீடு தேடி வந்து மது வகைகளை டெலிவரி செய்யத் திட்டமிடல் நடந்துவருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.
தி எகனாமிக் டைம்ஸ் ஊடகம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
புதுதில்லி, கர்நாடகம், அரியானா, பஞ்சாப், தமிழ்நாடு, கோவா, கேரளம் ஆகிய மாநிலங்களில் முன்னோட்டமாக இந்தத் திட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஸ்விக்கி, பிக்பேஸ்கட், சொமாட்டோ, அதன் இணையவணிகப் பிரிவான பிளிங்கிட் ஆகியவை மூலமாக, முதலில் குறைந்த ஆல்ககாலைக் கொண்அ பீர், ஒயின் போன்ற மது வகைகளை விற்பனை செய்ய ஆலோசிக்கப்பட்டுள்ளதாக இந்த விவகாரம் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிக்கை ஒன்றில் கருத்துத் தெரிவித்துள்ள ஸ்விக்கியின் துணைத்தலைவர் திங்கர் வசிஷ்ட், “ இணையதள விற்பனை முறையில் முனைக்கு முனை ஆவணப்பூர்வம், வயது நிரூபனம் போன்றவற்றுக்கு உறுதிப்பாடு உண்டு. குறிப்பிட்ட நாள்கள், பகுதி ஆகியவற்றில் இணையதளத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவது சாத்தியம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், சத்திஸ்கர், அசாம் ஆகிய மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் இணையதள விநியோகம் அனுமதிக்கப்பட்டது. மகராஷ்டிரத்தில் சில தரப்புகளைத் தவிர, இந்த மாநிலங்களில் இப்போது அந்த முறைக்கு அனுமதி இல்லை.
இந்த நிலையில் இணையதளம் மூலமான மது விநியோக முறை குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்படுகிறது.
“வளர்ந்துவரும் பெருநகரங்களில் பெருகும் மக்கள்தொகையினருக்கு இது ஏதுவாக இருக்கும். கொண்டாட்டமாக, உணவுடன் சேர்ந்து குடிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும். முதியோரும் பெண்களும் மதுக்கடைகளில் போய் நின்று வாங்குவதை அசௌகர்யமாகக் கருதும் நிலை இருக்காது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இப்போதைக்கு ஒடிசாவிலும் மேற்குவங்க மாநிலத்திலும் மட்டும் வீட்டுக்கு வந்து மது விற்பனை செய்வது அனுமதிக்கப்படுகிறது.
இந்த முறையில் ஓடிபி, தன்விவரம் தெரிவிப்பு போன்றவை கட்டாயம் என்பதால் தற்போதைய மரபான விற்பனையைவிட குறைந்த வயதினர் குடிப்பதைக் கட்டுப்படுத்தவும் முடியும் என்றும் சில அதிகாரிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள்.