பாபா சித்திக் / லாரன்ஸ் பிஷ்னோய் 
இந்தியா

பாபா சித்திக்கை ஏன் கொலை செய்தோம்? - அதிர்ச்சியளிக்கும் கொலை கும்பலின் முகநூல் பதிவு!

Staff Writer

பாபா சித்திக் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாபா சித்திக் படுகொலைக்கு பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் தலைமையிலான கும்பல் பொறுப்பேற்றுள்ளது. துப்பாக்கி சூடு நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிஷ்னோய் கும்பல் சமூக ஊடகத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளது. மேலும், அந்த பதிவில் சல்மான் கானுடன் சித்திக் கொண்ட தொடர்புதான் அவரின் கொலைக்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.

சித்திக்கை கொல்வதற்காக அவரது அன்றாட நடவடிக்கைகளை கொலையாளிகள் பல மாதங்களாக கண்காணித்துள்ளனர். அவரது வீடு மற்றும் அலுவலகத்தை உளவு பார்த்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். அவரை கொலை செய்வதற்காக ஒவ்வொருவருக்கும் தலா 50,000 ரூபாய் முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், படுகொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் அவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

காவல்துறையின் தகவலின்படி, துப்பாக்கியுடன் வந்த மூன்று நபர்கள் இந்த கொலையில் ஈடுபட்டுள்ளனர். மூவரில், இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் அரியானாவைச் சேர்ந்த குர்மாயில் பல்ஜித் சிங் (வயது 23) மற்றொருவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தரம்ராஜ் காஷ்யப் (வயது 19). மூன்றாவது நபர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவ குமார் கவுதம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த கொலைக்கு மூளையாக இருந்ததாக கூறப்படும் நான்காவது நபரும் தப்பி ஓடி உள்ளார். கொலையில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதற்கிடையே, மும்பையில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்த சல்மான் கானின் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 2 நபர்கள் சல்மான் கான் வீட்டிற்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். லாரன்ஸ் பிஷ்னோயுடன் தொடர்புடைய அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சல்மான் கானை படுகொலை செய்வதற்காக பிஷ்னோய் கும்பல் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டத்தை வெளியிட்டதாகவும், இந்த திட்டம் ஆகஸ்ட் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை பல மாதங்களாக உருவாக்கப்பட்டது என்றும் காவல்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram