நிலவில் தரையிறங்கிய சந்திராயன் 3 
இந்தியா

நிலவில் தரை இறங்கியது சந்திராயன்- 3; கடைசிக் கட்டம் பற்றி விஞ்ஞானி விவரணை!

Staff Writer

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.03 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கியது.

முன்னைய செய்தி:

சந்திராயன் 3 - கடைசி 15 நிமிடங்கள், 7 கட்டங்கள், என்னென்ன நடக்கும்?

நிலவைச் சுற்றிவரும் சந்திராயன் - 3 விண்கலம், இன்று மாலை திட்டமிட்டபடி தரையிறங்குவதற்கும்முன், பதினைந்து நிமிடங்களில் பரபரப்பான எட்டு கட்டங்களை வெற்றிகரமாகக் கடக்கவேண்டும். ஒட்டுமொத்த நாடே காத்துநிற்கும் அந்த நிறைவுக் கட்ட நிகழ்வுகள் பற்றி மைய அரசின் விஞ்ஞான் பிரச்சார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி. வெங்கடேசுவரன் அவர்கள் அந்திமழைக்காக விவரித்தார். அதன் விவரம்:

25 கி.மீ.

நிலவைச் சுற்றிவரும் சந்திராயன் 3 விண்கலம், நிறைவுக் கட்டப் பயணத்தைத் தொடங்கும்போது, மணிக்கு 6 ஆயிரம் கி.மீ. வேகத்தில் 25 கி.மீ. உயரத்தில் வலம் வந்தபடி இருக்கும். அதிலிருந்து முதலில் 7.4 கி.மீ. உயரத்துக்குக் கீழே வரும்.

7.4 கி.மீ.

முதலில் கீழே வந்தபின் அதாவது 7.4 கிமீ உயரத்தைத் தொட்டதும், மணிக்கு 1,200 கிமீ வேகத்துக்கு அதன் வேகம் குறையும். அதே சமயம், தன் இருப்பிடத்தை அறிந்து தரையிறங்கும் பகுதியை நோக்கி செயற்கைக் கோள் உதவியுடன் திட்டமிட்ட வழித்தடத்தில் இயங்கும்.

விஞ்ஞான் பிரச்சார அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேசுவரன்

6.8 கி.மீ.

அடுத்த கட்டமாக, கலத்தின் பயண உயரம் 6.8 கிமீ அளவுக்குக் குறைக்கப்பட்டு, முன்னோக்கிச் செல்லும் வேகமும் குறைக்கப்படும். இந்தக் கட்டத்தில், நான்கு கால்களை முன்னோக்கி நீட்டியவாறு சென்ற விக்ரம் லேண்டர் கருவி, சற்று சாய்ந்து 50 டிகிரி கோணத்துக்கு சாய்வதுடன், அதன் கீழ்நோக்கிய வேகமும் அதிகரிக்கும். செயற்கை நுண்ணறிவு மூலம் உயரம், இருப்பிடம், வேகம் ஆகியவற்றை அறிந்து அதன் பயணம் வழிநடத்தப்படும்.

800 மீட்டர்

அடுத்த கட்டமாக, 800 மீட்டர் உயரத்துக்கு விக்ரம் தரையிறங்கு கலம் கீழிறங்கும். அப்போது அதன் 90 டிகிரியாக செங்குத்தாக அதாவது அதன் நான்கு கால்களும் நிலவின் தரையை நோக்கியபடி இருக்கும். இந்தக் கட்டத்தில் முன்னோக்கிய வேகமும் கீழிறங்கும் வேகமும் பூஜ்யமாக அதாவது வேகமே இல்லாமல் ஆக்கப்படும்.

இந்தக் கட்டம் வந்தடைந்ததும், அந்தரத்தில் 12 நொடிகள் அப்படியே ஒரே இடத்தில் பறக்கும். அப்போது, இடர் உணர் ஆபத்துதவிர்ப்புக் கருவிகளைக் கொண்டு தரையிறங்க வேண்டிய பாதுகாப்பான இடங்கள் எவை என்பதை விக்ரம் தரையிறங்கு கருவி தீர்மானிக்கும்.

150 மீட்டர்

எண்ணூறு மீட்டரில் இருந்து மணிக்கு 18 கிமீ வேகத்தில் 150 மீட்டர் உயரத்துக்கு விக்ரம் தரையிறங்கி கீழிறங்கும். இந்த உயரத்திலும் மீண்டும் தரையிறங்கு கலம் 22 நொடிகள் அப்படியே அந்தரத்தில் நிற்கும். தரையிறங்குவதற்கான பாதுகாப்பான புள்ளி எது என இன்னும் துல்லியமாக செயற்கை நுண்ணறிவுடன் தீர்மானிக்கப்படும்.

60 மீட்டர்

தரையிறங்கும் புள்ளியைத் தேர்வுசெய்துவிட்டால், அதை நோக்கி தேவையையொட்டி பக்கவாட்டாகவும் லேண்டர் கருவியால் நகரமுடியும். கீழேயும் இறங்கமுடியும்.

10 மீட்டர்

அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து பத்து மீட்டர் உயரம்வரை மெதுவாக, நேராக தரையிறங்கு கலம் கீழிறங்கும். இப்போது கீழே இறங்கும் வேகத்தைக் கணக்கிட்டு, அதன் மூலம் மேற்கொண்டு எந்த வேகத்தில் கலத்தை இயக்கலாம் என்பது, செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்மானிக்கப்படும். அதாவது, நிலவின் தரைப் பகுதியை லேண்டரில் உள்ள கேமரா படம் எடுத்துக்கொண்டே இருக்கும்; அந்தப் படங்களின் அளவு எவ்வளவு விரைவில் பெரிதாகிறதோ, அதை வைத்து அதன் வேகத்தை துல்லியமாக அளவிடும்படி இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்த முறை சந்திராயன் 3 விண்கலத்தை வடிவமைத்துள்ளனர்.

நிலவின் தரையிலிருந்து பத்து மீட்டர் உயரத்தைத் தொட்டதும், சந்திராயன் விண்கலத்தின் எதிர் உந்துவிசை ராக்கெட்டை நிறுத்திவிடுவார்கள். அதையடுத்து, விக்ரம் தரையிறங்கு கலத்தின் மெய்சிலிர்க்க வைக்கக்கூடிய கடைசிக் கட்டமான- தரையைத் தொடும் பயணம் நிகழும்.

தரையிறங்கும் சாதனை

திட்டமிட்டபடி, விக்ரம் தரையிறங்கு கலம் நிலவில் கால்வைத்தபின், அதன் நான்கு கதவுகளில் ஒன்றைத் திறந்து, அதனுள் இருக்கும் ரோவர் எனப்படும் ஊர்திக் கலம் வெளியே வர வழிசெய்யும்.

தரையிறங்கும் நிகழ்வு வெற்றிகரமாக முடிவடைந்தாலும், அது நிலவின் தரையில் கால்வைப்பதால் ஏற்படும் தூசு அடங்கியபின்னரே, பிரக்யான் எனும் ஊர்திக் கலம் வெளியே வரும்.

விக்ரம் தரையிறங்கு கலமும், பிரக்யான் ஊர்திக்கலமும் வெற்றிகரமாக இயங்கி படங்களை அனுப்பும். சீனாவை அடுத்து நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தின் மூலம் கால்வைத்த - இந்தியாவின் அடுத்த கட்ட உலக சாதனை விண்ணில் பொறிக்கப்படும்!