சந்திராயன் 3 விண்கலத்தின் உந்து கலனிலிருந்து லேண்டர் சற்றுமுன்னர் வெற்றிகரமாகப் பிரிக்கப்பட்டது.
கடந்த ஜூலை14ஆம் தேதி ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலமானது, ஆகஸ்ட் முதல் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டது. கடந்த 5ஆம் தேதி நிலவின் ஈர்ப்புப் பகுதிக்குள் செலுத்தப்பட்டது.
நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் தொடர்ந்து பயணம் செய்த சந்திராயன் விண்கலம், அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறியபடி உள்ளது. அதன் சுற்றுவட்டப் பாதை நான்கு முறை படிப்படியாகக் குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் விண்கலத்தின் உந்துகலனில் இருந்து லேண்டர் கருவி தனியாகப் பிரிக்கப்பட்டது. இது நாளை மாலை 4 மணியளவில் இன்னும் சற்று குறைவான சுற்றுவட்டத்துக்கு நகர்த்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
லேண்டர் கருவி தனியாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில், விண்கலத்தின் உந்துகலன் அதன் சுற்றுவட்டப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.