கி.வீரமணி  
இந்தியா

ஆதிவாசி- வனவாசி - சூழ்ச்சி... விவரிக்கும் கி.வீரமணி

Staff Writer

‘ஆதிவாசிகள்' என்பதை ‘வனவாசி’, ‘காட்டுவாசி’ என்று மாற்றியது சூழ்ச்சியே என்றும் ‘ஆதிவாசி’கள் என்றால் அந்த மண்ணுக்குரியவர் என்று பொருள்– அதனை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவசியம் என்றும்  இராகுல் காந்தி இதனை வலியுறுத்துவது மிகவும் சரியானதே என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”ஒடுக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்நாட்டில் உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களான பழங்குடியினர், தாழ்த்தப்பட்டோர் என்ற பிரிவினர் பெரும்பகுதி மக்கள் மட்டுமல்ல; நாட்டின் ஆதி குடியினரும்கூட! அதனால்தான் அவர்களுக்குரிய வரலாற்றுப் பெயராக ‘ஆதிதிராவிடர்கள்’ என்ற பெயர் தென்னாட்டில் நிலவி, தமிழ்நாடு அரசில் சுமார் 40 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ பெயராகவே நீடிக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார். 

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சர்வேயைச் சுட்டிக்காட்டிய அவர், ”இந்த ஒடுக்கப்பட்ட மக்களை பிரிட்டிஷ் ஆட்சியில் 1935 ஆம் ஆண்டு ஒரு சர்வே மூலம் அடையாளம் கண்டே, ‘‘பழங்குடியினர்’’, ‘‘தாழ்த்தப்பட்டோர்’’ ஆகியோரின் உரிமைக்காக ஓர் அட்டவணை (Schedule) தயாரிக்கப்பட்டு, அது  இந்திய அரசு சட்டம் 1935 இன்படி ஏற்கப்பட்டது. அதன்படி அட்டவணையில் உள்ள பழங்குடியினர், Scheduled Tribes என்றும், அதுபோல, அட்டவணையில் உள்ள சில மிகவும் ஒடுக்கப்பட்ட ஜாதிகள்  ‘‘அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதிகள்’’ (Scheduled Castes) என்ற பெயருடனும் அழைக்கப்பட்டனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் (1949) உருவானபோது டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான வரைவுக்குழு, அந்த 1935 சட்டத்தில் உள்ளபடியே, இதனை ஏற்றுக்கொண்டு, ‘‘அட்டவணைப்படுத்தப்பட்ட பழங்குடியினர்’’, ‘‘அட்டவணைப்படுத்தப்பட்ட ஜாதியினர்’’ என்பதே சட்டப்படி அடையாளப்படுத்தியது.
அதற்குமுன் சமூக வரலாறுப்படி அவர்கள் பூர்வக் குடிகள் ஆவார்கள். அவர்களில் பலர் காடுகளில், மலைகளில் வசிப்பதோடு, அந்த இயற்கை வளங்களைப் பாதுகாத்து வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களும் மற்ற மக்களைப்போலவே, உரிமையுடைய மனிதர்கள்தானே! (காடுகள், மலைகளில் வசிக்காத சில சமூகத்தினரும் பழங்குடியினர் பட்டியலில் உண்டு. அவர்களைப் பொதுவாக பழங்குடியினர் என்று அழைப்பதே சரியானதே!)” என்று அழுத்தமாகக் கூறியுள்ளார். 

“அவர்களை, ஆதிக்கவாதிகள் நாளடைவில் ஒதுக்கி, அவர்களது வாழ்வுரிமைகளைக் காணாமற்போகும்படி செய்துவிட்ட கொடுமை மிகவும் பரிதாபத்திற்குரியது!
அதிகமாக உழைக்கும் அந்த மக்களின் படிப்பறிவு பறிக்கப்பட்டது – வருண தர்மத்தாலும், ஆதிக்க அரசியலாலும் என்பது மறுக்க முடியாத வரலாற்று உண்மை ஆதிவாசிகள்,  பழங்குடியினர்  என்று தாங்கள் அழைக்கப்படுவதில் அவர்கள் பெருமையுறுகின்றனர். மேலும் அச்சொல்லில், அந்த மண்ணுக்குரியவர்கள் என்ற அவர்களது அறவழிப்பட்ட உரிமை பறிக்கப்படவில்லை.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர், அவர்களுக்கு ‘வனவாசி’ (Vanavasi), (‘காட்டுவாசி’) என்ற பெயரைச் சூட்டி, ‘ஆதிவாசி’ என்ற பெயரைக் காணாமற்போகச் செய்யும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.
‘‘ஆதிவாசிகள்’’ என்றால், அதில் உரிமை உடையவர்கள் என்ற பொருள் தானாகவே உள்ளது; ஆனால், வனவாசிகள் என்றால், வனத்தில் – காட்டில் வசிப்பவர்கள் என்றே பொருள்பட்டு, அவர்களது மண்ணின் உரிமையை அவர்கள் பெற வாய்ப்பற்ற நிலை உள்ளது என்ற விமர்சனத்தை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ஜார்க்கண்ட் தேர்தல் பிரச்சாரத்தில் கூறியுள்ளது – சரியான கருத்தே!” என்று வீரமணி ஆமோதித்துள்ளார். 

”மேலும், அரசமைப்புச் சட்டத்தின்படி ‘வனவாசி’ என்ற சொல், அதில் இல்லாதபோது, இதை அரசு அதிகாரப் பொறுப்பினர் பயன்படுத்துவது ஏற்கத்தக்கதா?
‘பெயரில் என்ன வருகிறது?’ என்ற கேள்வி அர்த்தமற்றது; அதில்தான் மானமும், கவுரவமும், உரிமையும்கூட இருக்கிறது.
‘ஊனமுற்றோர்’ என்ற சொல் மாற்றப்பட்டு, ‘‘மாற்றுத் திறனாளிகள்’’ (Physically Challenged Person) என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது!

அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் கருணாநிதி  முதலமைச்சராக இருந்தபோது, ‘‘குற்றப் பரம்பரையினர்’’ (‘‘Criminal Tribes’’) என்ற சொற்களை சட்டப்படி மாற்றி, ‘‘சீர்மரபினர்’’ ஆக்கியது மானம், மரியாதை அடிப்படையில் அல்லவா? இப்படி பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. எனவே, பூர்வகுடிகள் – பழங்குடியினர் என்பதுதான் நியாயமானது; அவர்களை ‘வனவாசி – காட்டுவாசி’ என்று அழைப்பதுபற்றி மறுசிந்தனை செய்து மாற்றம் செய்யப்படவேண்டியது அவசியம்!” என்றும் கி. வீரமணி கூறியுள்ளார். 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram