கர்நாடக ஆளுநர் ஒப்புதல்  
இந்தியா

முதல்வர் மீது ஊழல் வழக்கு- கர்நாடக ஆளுநர் ஒப்புதல்!

Staff Writer

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது ஊழல் வழக்குப் பதிய அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் இன்று அனுமதி அளித்துள்ளார்.

ஆளுநரின் செயலகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” 1988 ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவின்படியும் பாரதிய நகரிக சுரக்சா சம்கிதையின் 218ஆவது பிரிவின்படியும் முதலமைச்சர் சித்தராமையாவின் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் வழக்குப்பதிய ஆளுநர் அனுமதி அளிக்கத்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைசூரு பெருநகர வளர்ச்சிக் குழும முறைகேடு எனும் இவ்வழக்கில், முதலமைச்சர் சித்தராமையா, அவரின் மனைவி பார்வதி, மைத்துனர் மலிகார்ஜுன சுவாமி தேவராஜ் உட்பட 10 பேர் மீது அரசுக்கு வழங்கிய நிலத்துக்காக மிகவும் அதிகமான இழப்பீட்டைப் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சினேகமயி கிருஷ்ணா எனும் சமூக ஆர்வலர் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

அதாவது, அவர்கள் அளித்த நிலத்தைவிட பல மடங்கு மதிப்புகொண்ட இடம் அவர்களுக்கு மாற்றீடாக வழங்கப்பட்டுள்ளது என்பது புகார்.

ஆனால், மைசூரு பெருநகர வளர்ச்சி ஆணையம் தங்களின் இடத்தை சட்டவிரோதமாக கைப்பற்றியதால், தன் மனைவி கடந்த 2014இல் மாற்று நிலத்தைக் கோரி மனுசெய்தார் என்றும், அப்போது முதலமைச்சராக தான் இருந்தநிலையில் இதுதொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றும் அப்போது பா.ஜ.க.வும் ஜனதா தளமும் சேர்ந்து தன் அரசைக் கவிழ்க்க சதிசெய்து அது நடைபெறவில்லை என்றும் மக்கள் நலத் திட்டங்களால் அவர்களின் திட்டம் கைகூடவில்லை என்றும் சித்தராமையா கூறினார்.

இந்த விவகாரத்தில் எல்லாமே சட்டப்படிதான் நடந்துள்ளன; என் மனைவிக்கு மாற்று இடம் ஒதுக்கியதில் நான் விதியை மீறவில்லை; பா.ஜ.க. ஆட்சியில் 2021இல்தான் அவருக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது என்று இந்த மாதத் தொடக்கத்திலேயே சித்தராமையா கூறியிருந்தார்.

இதை சட்டரீதியாக சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் ஆளுநரின் அனுமதியை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அரசு முறையிடும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram