கமல்நாத், ஜீத்து பட்வாரி 
இந்தியா

கழற்றிவிடப்பட்ட கமல்நாத்... ம.பியில் காங்கிரஸ் அதிரடி!

Staff Writer

மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் முதலமைச்சர் கமல்நாத் நீக்கப்பட்டு, அப்பதவிக்கு ஜீத்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

230 உறுப்பினர்களைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப் பேரவைக்கு கடந்த மாதம் 17-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் 163 இடங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 66 இடங்களே கிடைத்தன.

இந்த நிலையில், மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து முன்னாள் முதல்வர் கமல்நாத் மாற்றப்பட்டு புதிய தலைவராக ஜீத்து பட்வாரி நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநில தலைவராக கமல்நாத் ஆற்றிய பங்களிப்புக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த தீபக் பாஜியை அப்பதவியில் தொடர ஒப்புதல் அளித்துள்ள மல்லிகார்ஜுனா கார்கே, சத்தீஸ்கர் சட்டமன்ற குழு தலைவராக சரண் தாஸ் மஹந்தை நியமித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பட்வாரி, 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலான கமல்நாத் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர். 50 வயதாகும் பட்வாரி, நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ராவ் தொகுதியில் நின்று தோல்வி அடைந்திருந்தாலும் தற்போது அவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இது மத்திய பிரதேச காங்கிஸில் அமைப்பு ரீதியில் இளம் தலைவர்களை முன்னிலைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.