கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதியான அபிஜித் கங்கோபாத்யா இன்று பா.ஜ.க.வில் இணைந்த நிலையில், அவர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித்தாவல்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பா.ஜ.க.வை நோக்கி மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இணைவது அதிகரித்துவருகிறது.
இந்த நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பதவியிலிருந்து விலகிவிட்டு அரசியலுக்கு வரப்போவதாகவும் அதைத் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் கூறியிருந்தார். சொன்னபடியே தன் நீதிபதி பதவியிலிருந்து கடந்த 5ஆம் தேதி அவர் விலகினார்.
தொடர்ந்து, அபிஜித் கங்கோபாத்யாய் இன்று பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். அம்மாநில பா.ஜ.க. தலைவர்கள் முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அவர் வரும் மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் போட்டியிடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.