கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேறப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் பினராயி விஜயன், ’சங் பரிவார் அமைப்புகளுக்கு மனுஸ்மிருதி தான் அரசியலமைப்பு சட்டம்’ என விமர்சித்துள்ளார்.
நாடு முழுமைக்கும் ஒரே சட்டமாக பொது சிவில் சட்டத்தைக் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயன்று கொண்டிருக்கிறது. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்கள், பழங்குடிகள் பாதிக்கப்படுவார்கள் என பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் பொது சிவில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்த முதலமைச்சர் பினராயி விஜயன், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது என்பது அரசியலமைப்பின் மதச்சார்பின்மையைப் பாதிக்கும் என்றார்.
மேலும், “சங் பரிவார் அமைப்புகளுக்கு மனு ஸ்மிருதிதான் அரசியலமைப்பு. அவர்கள் நமது நாட்டின் அரசமைப்பை மதிக்கவில்லை. பொது சிவில் சட்டம் தேவையா, இல்லையா என்பது குறித்து அவர்கள் விவாதிக்கவில்லை. சங் பரிவார் அமைப்புகள் சொல்லும் பொதுசிவில் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளபடியானது அல்ல. 2024 நாடாளுமன்றத் தேர்தலை முன்வைத்து மக்களை திசைதிருப்பவே பாஜக இதைக் கையில் எடுத்துள்ளது.” என்றும் கேரள முதலமைச்சர் விஜயன் கூறினார்.
கேரள சட்டப்பேரவையில் இடது ஜனநாயக முன்னணி, காங்கிரஸை உள்ளடக்கிய ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணிகள் ஏற்கெனவே பொது சிவில் சட்டத்திற்கு எதிராக உள்ளதால் சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.