கடவுச்ச்சீட்டு 
இந்தியா

நாட்டைவிட்டு வெளியேறும் இந்தியர்கள்; எந்த நாட்டில் அதிகம் குடியேறுகிறார்கள்?

Staff Writer

நாட்டிலிருந்து வெளியேறி கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியுள்ளது என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“கடந்த இருபது வருடங்களில் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த மாதம் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

இதேபோல, மாநிலங்களவை உறுப்பினர் சந்தீப் குமார் பதக்கின் கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2022ஆம் ஆண்டு 2,25,620 பேரும், இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 87,206 பேரும் தங்கள் இந்தியக் குடியுரிமையைத் துறந்துள்ளனர் என தெரியவருகிறது.

இந்தியர்கள் அதிக அளவு அயல்நாட்டுக் குடியுரிமை பெற்ற நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்காவும் (3.29 லட்சம்), இரண்டாம் இடத்தில் கனடாவும் (1.62 லட்சம்), மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும் (1.32 லட்சம்) உள்ளன. இந்தியாவில் குடியுரிமையைத் துறந்தவர்களில் 85 சதவீதத்தினர் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில்தான் குடியேறியுள்ளனர்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ” ‘மேக் இன் இந்தியா’திட்டத்தின் மூலம் அவர்களின் திறமைகளை உள்நாட்டிலேயே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது" என்றார்.