ராணுவத் தளபதி உபேந்திரா திவேதி, கடற்படை தளபதி தினேஷ் குமார் திரிபாதி  
இந்தியா

முதலில் கிளாஸ் மேட்... பின்னர் தளபதிகள்!- என்ன ஒரு அற்புதம்

Staff Writer

ஒரே வகுப்பில் படித்த இரண்டு பேரில், ஒருவர் இந்திய ராணுவத்தின் தளபதியாகவும் மற்றொருவர் கப்பற்படை தளபதியாகவும் பொறுப்பேற்றிருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

ராணுவத் துணை தளபதியாக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ளார்.

இவர் காலாட்படை டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட பல பொறுப்புகளை கவனித்தவர். ஜூலை 1, 1964 இல் பிறந்த உபேந்திர திவேதி, டிசம்பர் 15, 1984 அன்று இந்திய ராணுவத்தின் ஜம்மு - காஷ்மீர் ரைபிள்ஸில் சேர்ந்தார்.

அதேபோல, கடற்படை துணைத் தளபதியாக பணியாற்றி வந்த வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி கடந்த ஏப்ரல் 30 முதல் கடற்படை தலைமை தளபதியாக நியமனம் செய்யப்பட்டார்.

அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதி 1985ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் நிர்வாகப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர், கிட்டத்தட்ட 39 ஆண்டுகளாக இதில் பணியாற்றியுள்ளார்.

இந்த நிலையில், இந்திய ராணுவத் தளபதியாக இன்று பொறுப்பேற்றுள்ள லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதியும், கடற்படைத் தளபதியான அட்மிரல் தினேஷ் திரிபாதியும் பள்ளி பருவத் தோழர்கள் என்ற சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் உள்ள சைனிக் பள்ளியில் இவர்கள் இருவரும் ஒரே வகுப்பில் பயின்றவர்கள் என்ற தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஏ.பரத் பூஷண் பாபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்விரண்டு தளபதிகளின் பணி நியமனங்களும், ஏறக்குறைய இரண்டு மாத இடைவெளியில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.