மகாராஷ்டிராவில் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
யு.பி.எஸ்.சி. தேர்வில் அகில இந்திய அளவில் 821ஆவது ரேங்க் பெற்ற பூஜா கேத்கர், மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தின் உதவி ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
இவர், பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத வசதிகளைப் பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்தது. பூஜா தனது சொந்த ஆடி காரில் மகாராஷ்டிர அரசு என்ற பலகையும் சிவப்பு-நீல சைரன் விளக்கும் பயன்படுத்தி வந்துள்ளார்.
புனே மாவட்ட கூடுதல் ஆட்சியர் அஜய் மோர் இல்லாதபோது அவரது முன் அறையை பூஜா ஆக்கிரமித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் அஜய் மோரின் அனுமதியின்றி நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலக தளவாடங்களை அகற்றியதுடன் வருவாய் உதவியாளரிடம் தனது பெயரில் லெட்டர் ஹெட், பெயர்ப் பலகை மற்றும் பிற வசதிகளை வழங்குமாறு கேட்டுள்ளார்.
விதிமீறல்கள் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இதுகுறித்து மாநிலத் தலைமைச் செயலாளருக்கு புனே மாவட்ட ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் கடிதம் அனுப்பினார். இதையடுத்து அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக பூஜா புனேயிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே, பூஜா மீது வேறு சில புகார்களும் கிளம்பியுள்ளன. அதாவது, அவர் பணியில் சேரும்போது சமர்ப்பித்த சாதி சான்றிதழ், மாற்றுத்திறனாளி என்பதற்கான சான்றிதழ்கள் போலியானவை என்ற தகவலும் வெளியாகி உள்ளன.
இவ்வளவு அதிகார துஷ்பிரயோகம் செய்திருக்கும் பூஜாவின் தந்தை கேத்கர், ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஆவார். அவர் தனது மகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஆட்சியர் அலுவலகத்திற்கு அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பிரகாஷ் அம்பேத்கரின் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு15,000 வாக்குகளுக்கு மேல் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்டோரில் கிரிமிலேயர் அல்லாதவர்களின் ஆண்டு வருமான 8 லட்சத்துக்குள் இருக்கவேண்டும். ஆனால் இந்த அதிகாரியின் தந்தை தேர்தலில் போட்டியிட்ட படிவங்களில் ஆண்டு வருமானம் 49 லட்சம் எனக் குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி, புகார்கள் எழுந்துள்ளன.
பயிற்சி அதிகாரியாக இருக்கும்போதே இவ்வளவு புகார்கள் என்றால்...