சூரல்மலை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட பெய்லி பாலம் 
இந்தியா

31 மணிநேரத்தில் 190 அடி பாலம்... வயநாட்டில் கை கொடுத்த இந்திய ராணுவம்!

Staff Writer

சூரல்மலை – முண்டக்கை கிராமங்களை இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு தற்காலிக பெய்லி பாலத்தை 31 மணி நேரத்தில் அமைத்துள்ளனர் ராணுவத்தினர்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கால் சூரல்மலை – முண்டக்கை கிராமங்களை இணைக்கும் வகையில், சூரல்மலையில் உள்ள ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் அடித்துச் செல்லப்பட்டது. இதனால், கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. மேலும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும் வகையில் ஆற்றின் குறுக்கே பெய்லி பாலம் அமைப்பதற்காக டெல்லி, பெங்களூருவிலிருந்து ராணுவத்தின் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பெய்லி பாலத்திற்கு தேவையான பொருட்கள் டெல்லியிருந்து கொண்டு வரப்பட்டன.

இரவு பகலாக பெய்த மழையை பொருட்படுத்தாமல் ஆற்றுக்குள் இறங்கி தற்காலிக இரும்பு பாலத்தை அமைக்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணிக்கு பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்தது.

31 மணி நேரத்திற்குள் இப்பாலத்தை ராணுவத்தினர் அமைத்துள்ளனர். இதன் நீளம் 190 ஆடியாகும். அகலம் 3 மீட்டர். இந்த பாலம் 24 டன் வரை எடையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கான குழுவை வழி நடத்திய இந்திய ராணுவ மேஜர் சீதா ஷெல்கே தலைமையில் நடைபெற்றது. அவரின் தலைமையில்தான் இந்த மொத்த பாலமும் கட்டப்பட்டது.

மண் அள்ளும் இயந்திரங்கள், குழிகளை தோண்டும் குழுக்கள் , டிரக்குகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் ஜீப்கள் முண்டகைக்கு செல்ல இந்த ஒரு பாலமே இனி போதுமானது என்று இராணுவ மேஜர் சீதா தெரிவித்துள்ளார்.

இந்த பாலங்கள் பெய்லி பாலங்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜெர்மன், இத்தாலி ராணுவங்கள் செல்லும் வழியில் பாலங்களை தகர்த்தன. எனவே அவற்றை விரைவில் கடக்க பிரிட்டன் அரசு அதிகாரி பெய்லி என்பவர் உருவாக்கி இருந்த இந்த தற்காலிக பாலம் கட்டும் முறை பயன்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பாலங்கள் அப்போது கட்டப்பட்டு படைகள் நகர்ந்தன. 1940களில் உருவாக்கப்பட்ட இந்த பாலம் கட்டும் முறை இன்றும் அவர் பெயரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram