மணிப்பூர் 
இந்தியா

போலீஸ் வேனில் இருந்து கீழே இறக்கி முதல் படுகொலை! அதிரும் மணிப்பூர்

Staff Writer

மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டது. மெய்தி சமூகத்தினருக்கும் குகி சமூகத்தினரிக்கும் இடையே ஏற்பட்ட மோதல்தான் இப்போது பற்றி எரியும் பிரச்னை. இரு பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட காணொளி இன்று இதை அகில இந்திய பிரச்னை ஆக்கி உள்ளது.

மணிப்பூர் இனக்கலவரம் குறித்து பலவித கருத்துகள் நிலவும் சூழலில், இந்த கலவரத்தால் முதலில் கைது செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டவர் ஒரு கல்லூரி மாணவர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

சுராசந்த்பூர் கல்லூரியில் இளங்கலை புவியியல் படித்து வந்தவர் வைபே (21). கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி, அவர் தனது முகநூல் பக்கத்தில், குகி இன மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்னைக்கு மெய்தி அரசியல்வாதிகளும் முதல்வருமே காரணம் என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது.

இது தொடர்பாக காவல் துறையினர், ஏப்ரல் 30ஆம் தேதி வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் அவருக்கு மே-3ஆம் தேதி நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. ஆனால், அதே முகநூல் பதிவிற்காக அவர் மீது மீண்டும் காவல் துறையினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

கடந்த மே 4ஆம் தேதி இரவு, இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடிந்து, வைபேயை சிறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் காவல் துறையினர். ​அப்போது, ​பொரொம்பட் என்ற பகுதியில் 800 பேர் கொண்ட ஆயுதம் தாங்கிய குழு ஒன்று அவர்களின் வாகனத்தை வழிமறித்துள்ளது. காவலர்களிடமிருந்த துப்பாக்கிகளையும் வெடிபொருட்களையும் கைப்பற்றிய அக்குழு, வையேயை வாகனத்திலிருந்து வெளியே இழுத்து அடித்தே கொன்றுள்ளனர். இவர்களிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள காவல் துறையினர் வெவ்வேறு பகுதிகளுக்குத் தப்பி ஓடியுள்ளனர்.

உயிரிழந்த வைபேயின் அப்பா, சூராசந்த்பூர் மாவட்ட காவல் துறைக்கு அனுப்பியுள்ள புகாரில், காவல் உதவி ஆய்வாளரின் கவனக்குறைவாலும், அவரின் சதியாலுமே தன்னுடைய மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவமே மணிப்பூர் கலவரத்தின் முதல் கொடூரமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

ஒன்றரை மாதமாக நிகழும் இந்த கோரக் கலவரத்தில் இன்னும் எத்தனை கோடூரங்கள் நடந்திருக்குமோ?