போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் 
இந்தியா

போலி நீதிமன்றம் நடத்திய மோசடி ஆசாமி கைது!

Staff Writer

குஜராத்தில் போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் என்பவரை காவல் துறையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

குஜராத்தின் அகமதாபாத் நகரை சேர்ந்தவர் மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன். இவர் குஜராத் தலைநகர் காந்திநகரில் வாடகை கட்டிடத்தில் போலி நீதிமன்றம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அசல் நீதிமன்றத்தை போன்று போலியாக எழுத்தர்கள், வழக்கறிஞர்களையும் நியமித்து இருக்கிறார்.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலங்கள் சார்ந்து தொடரப்பட்ட வழக்குகளின் மனுதாரர்களை கிறிஸ்டியனின் போலி வழக்கறிஞர்கள் அணுகி உள்ளனர். சிறப்பு தீர்ப்பாயத்தில் விரைந்து தீர்ப்பு வழங்கப்படும் என்று அவர்கள் வாக்குறுதி அளித்து உள்ளனர்.

இதை நம்பிய பொதுமக்கள், கிறிஸ்டியனின் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அசல் நீதிமன்றம் போன்றே மனுக்கள் மீது விசாரணை, தீர்ப்பு ஆகியவை வழங்கப்பட்டு வந்துள்ளன.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாபுஜி என்பவர் நில விவகாரம் தொடர்பாக போலி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவர் ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருந்தார். சுமார் 50 ஆண்டு காலம் அரசு நிலத்தில் குடியிருப்பதால் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்ய வேண்டும் என்று பாபுஜி கோரினார்.

இந்த வழக்கை விசாரிக்க போலிநீதிபதி கிறிஸ்டியன், மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்று உள்ளார். அரசு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களுக்கு பிறகு குறிப்பிட்ட அரசு நிலம் பாபுஜிக்கு சொந்தமானது என்று கிறிஸ்டியன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதுதொடர்பான தீர்ப்பாணையை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கி உள்ளார். ஆனால் ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி வழக்கு தொடர்ந்து உள்ளார். கிறிஸ்டியனின் போலி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை இணைத்து ரூ.200 கோடி மதிப்பிலான அரசு நிலத்தை தனது பெயரில் மாற்ற வேண்டும் என்று அவர் மனுவில் கோரியிருந்தார்.

இந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகமடைந்த நீதிமன்ற பதிவாளர் ஹர்திக் தேசாய், போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியபோது, போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியனின் சட்டவிரோத செயல்கள் அம்பலமாகின. சில நாட்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் காந்தி நகரில் போலி நீதிமன்றம் நடத்தி வந்த கிறிஸ்டியன் ஒராண்டில் மட்டும் 500 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். பல கோடி ரூபாய் மோசடியும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.