நேற்று காலை 6.30 மணி. எச்.ஆர்.பி.ஆர். லே அவுட் பகுதி- பெங்களூருவில் இருக்கும் அந்த வீட்டின் கதவு தட்டப்படுகிறது. கதவைத் திறந்துவந்த வீட்டின் உரிமையாளர், என்னவென்று கேட்க, கதவைத் தட்டியவர் தன்னை அறிமுகப்படுத்தியதுதான் தாமதம். டப்பென்று அடைக்கப்பட்ட கதவு, இறுக மூடப்பட்டது.
சட்ட எடை, அளவியல் துறை துணைக் கட்டுப்பாட்டு அதிகாரியான அத்தர் அலியின் வீடுதான் அது. போனவர், ரெய்டு செய்யச் சென்றவர் லோக் ஆயுக்தா போலீஸ் கண்காணிப்பாளர், கோண வம்சி கிருஷ்ணா.
சந்தேகப்பட்டது சரியாத்தான் போச்சு என உடன்வந்த காவலர்களை அந்த வீட்டைச் சுற்றி வலைபோல நிற்கச் சொன்னார், அவர்.
அலியின் வீட்டிலிருந்து பக்கத்து வீட்டுக்கு பாய்ந்துசென்று விழுந்திருக்கிறது, ஒரு பை. போன வேகத்தில் அந்தப் பை பிய்ந்து அதற்குள்ளிருந்து சுமார் இரண்டே கால் கிலோ நகைகள் தனித்தனியாக விழுந்து தெறித்துள்ளன.
அடுத்து என்ன...
அதிரடியாக அத்தர் அலியின் வீட்டுக்குள் நுழைந்து சல்லடை போட்டுத் தேடுதலை நடத்தியது, லோக் ஆயுக்தா படை.
அதில், அவரிடமிருந்து 2.2 கிலோ தங்கத்துடன், 25 இலட்சம் ரூபாய் ரொக்கம், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள், நான்கு மனைகள், மூன்று வீடுகளுக்கான ஆவணங்கள் என 8.6 கோடி ரூபாய் மதிப்பான வருவாய்க்கு மீறிய சொத்துகள் கண்டறியப்பட்டன.
இவர் மட்டுமில்லாமல், நேற்று பெங்களூரு நகரில் மட்டுமின்றி, துமக்கூரு, சிவமொக்கா, யாத்கிர், மைசூரு என பல இடங்களில் வருவாய்க்கு மீறி சொத்துசேர்த்த 12 அரசு உயர் அதிகாரிகளிடம் ரெய்டு நடத்தப்பட்டது. அதில் கணிசமான ஆதாரங்களை லோக் ஆயுக்தா படையினர் கைப்பற்றினார்கள்.