ஸ்விக்கி, சோமாட்டோ ஊழியர்கள் 
இந்தியா

ஐ.டி. ஊழியர்களா...? இல்ல இல்ல... இவங்கதான் அதிகம் சம்பாதிக்கிறாங்க!

Staff Writer

இந்தியாவில் சில ஐ.டி. ஊழியர்களை விட ஸ்விக்கி, சோமாட்டோவில் வேலை பார்க்கும் ஊழியர்கள்தான் அதிகம் சம்பாதிப்பதாக தெரியவந்துள்ளது.

பெங்களூரைச் சேர்ந்த யூடியூபர் லவ்னா காமத், ஸ்விக்கி -சோமாட்டோவில் வேலைப் பார்க்கும் இரண்டு ஊழியர்களை வீடியோ நேர்காணல் செய்துள்ளார்.

அதில், ஸ்விக்கியில் வேலை பார்க்கும் 22 வயதான சிவா என்பவர் மாதம் ரூ. 40,000 முதல் 50,000 வரை சம்பாதிப்பதாகக் கூறியுள்ளார்.

மூன்று வருடமாக ஸ்விக்கியில் வேலை பார்த்து வரும் அவர், கடந்த ஆறு மாதத்தில் இரண்டு லட்சம் ரூபாய் சேமித்துள்ளதாக நேர்காணலில் கூறியுள்ளார்.

இவரைப் போன்றே மூன்று வருடமாக சோமாட்டோவில் வேலை பார்த்து வரும் தையப்பா, மாதம் ரூ.40,000க்கு மேல் சம்பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களின் இந்த மாத வருமானம் ஐ.டி.ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்று கூறுகிறார் நேர்காணல் எடுத்த காமத்.

காமத் எடுத்த நேர்காணல் சமூக ஊடகத்தில் விவாகத்தைக் கிளப்பிய நிலையில், உணவு விநியோகம் செய்யும் வேலையின் கஷ்டத்தையும் அவர்கள் ஒருநாளைக்கு 12 லிருந்து 13 மணி நேரம் வேலை பார்த்தால்தான் இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, ஐடி ஊழியர்கள் தொடக்கத்தில் ரூ. 20லிருந்து 30 ஆயிரம் வரை சம்பளம் வாங்கினாலும், போகப்போக அவர்களின் ஊதிய உயர்வு மிக பெரியதாக இருக்கும். ஆனால், உணவு விநியோக ஊழியர்களின் வருமானத்தில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

காமத்தின் இந்த நேர்காணல், ஐடி ஊழியர்களுக்கும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு இடையே உள்ள ஊதிய முரண்பாட்டை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram