பாடகர் கத்தார் 
இந்தியா

இளையராஜாவுக்கு பத்தாயிரம் பேர்; எனக்கு பல லட்சம் பேர்!- புரட்சிப்பாடகர் கத்தாரின் பெருமிதம்!

Staff Writer

தெலுங்கானா மாநில புரட்சிப் பாடகர் கத்தார் ஹைதராபாத் நகரில் மருத்துவமனை ஒன்றில் கடந்த ஞாயிறு (-06-08- 2023) காலமாகிவிட்டார். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு வயது 77.

அவரோடு நெருங்கிப் பழகியவரும் எழுத்தாளரும் வழக்குரைஞருமான கி.நடராசன் தன் முகநூல் குறிப்பில் பின்வருமாறு எழுதி உள்ளார்.

 “தோழர் புரட்சிகர பாடகர் கத்தாருடன் நெருங்கிய பழகிய நிகழ்வுகளும் வாதங்களும் பாடல்கள் பயிற்சிகளும் நினைவில் மாறி மாறி வந்தும் போயும் கொண்டிருக்கின்றன. எண்பதுகளின் உண்மைகளை தேடி அலைந்து கொண்டிருந்த ஆண்டுகள்.... தத்துவம் அரசியல் சமூகம் பண்பாடு இலக்கியம் கலை என்று பல்துறைகளிலும் உண்மைகளை தேடி அலைந்து கொண்டிருந்த நேரத்தில்.‌. பெரியார் திடலிலும், தாஸ் பிரகாஷ் மண்டபத்திலும் ஜன நாட்டிய மண்டலி அமைப்பின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் மனதிற்குள் பெரும் எழுச்சியை உற்சாகத்தை பொங்கி பிரவாகமாக பெருக வைத்தது.. அமைப்பில் இணைவதற்கு இந்த மன எழுச்சியும் காரணமாக இருந்தது. தோழர்கள் கத்தார் சஞ்சீவி ரமேஷ் லலிதா டோலக் தயா இன்னும் பலரும் அந்த குழுவில் இருந்தனர்... பின்பு மக்கள் கலை மன்றத்துக்கு பொறுப்பாளராக இருந்த பொழுது AILRC என்ற புரட்சிகர கலை இலக்கிய பண்பாட்டு கூட்டமைப்பில் இருந்த பொழுது கத்தாருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது..‌‌ எண்பதுகளின் இறுதியில் ஓரிரு ஆண்டுகள் தலைவராக இருந்த பிறகு 90களில் ஆரம்பத்தில் மீண்டும் வெளிப்படையாக ஜன நாட்டிய மண்டலி செயல்பட்டது. கத்தாரும் அவர் குழுவினரும் வெளிப்படையாக வந்த பொழுது ஹைதராபாத் நிஜாம் மைதானத்தில் பல லட்சம் மக்கள் திரண்டு ஆரவாரம் செய்தனர்.. அதன் பிறகு நடைபெற்ற பல கூட்டங்களிலும் இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்று மக்கள் திரண்டு ஜனநாட்டிய மண்டலி பாடல்களை

கத்தார் மேடையில் பாடும் பொழுது கீழே லட்சக்கணக்கான மக்களும் சேர்ந்து பாடினார் என்பது அவர் புரட்சிகர பாடல் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் ஆழமாக உந்தி இருப்பதற்கு சான்றாக இருந்தது... தொடர்ந்து அவர் பாடிய கூட்டங்களில் இரண்டு லட்சம் மூன்று லட்சம் மக்கள் கூடி ஆரவாரம் செய்து அவர்களுடன் சேர்ந்து தாங்களும் பாடினர்... புதிய அரசியலில் எழுச்சியை உருவாக்கினர். அப்பொழுது முன்னோடி இதழுக்காக நன்கொடை வசூலிக்க தமிழ்நாடு முழுக்க கத்தார் குழு பயணம் செய்தது.. அந்த சமயத்தில் நடிகர் ரவீந்தர் (மிகவும் தொந்தரவு செய்து) கத்தார் அவர்களை சில பாடல்கள் பாட வைத்து, படிக்க வைத்து சினிமா சூட்டிங் போல எடுத்தார். அத்துடன் மக்கள் கலை மன்றமும் இணைந்து கலைப்பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவங்கள்! ஹரியானாவில் அனைத்திந்திய அளவில் ஐந்து நாட்கள் கலை பயிற்சி பட்டறை கத்தார் தலைமையில் நடந்தது.. அதில் கலந்து கொண்டது மறக்க முடியாத நினைவுகளை மீண்டும் மீண்டும் பசுமையாக அசைபோட வைக்கிறது. பல மொழி பேசும் மக்களின் புரட்சிகர பாடல்களை அருகே இருந்து கேட்கும் வாய்ப்பு கிடைத்தது... சென்னையில் கேகே நகரில் 1996 ஆண்டு நடைபெற்ற புரட்சிகர பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு அதில் கத்தார் கலந்து கொண்டு பாடியது நீங்காத நினைவில்.. 1997 ஆட்சியாளர்களும் அவரை சுட்டுக் கொள்ள முயற்சி செய்தது தோல்வியில் முடிந்தது.. மீண்டும் கத்தார் 1998 ஆம் ஆண்டு AILRC யின் அனைத்திந்திய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு எழுச்சிகரமான கலை நிகழ்ச்சிகளை தொடர்ந்தார்..

......

பின்னர் மக்கள் திரள் அமைப்புகளை கைவிடுவது என்ற அமைப்பின் முடிவால் எனக்கு முரண்பாடு ஏற்பட்டு விவாதித்து கொண்டிருந்தேன்.. இந்த நேரத்தில் 2000 ஆண்டு ராஜீவ் கொலையை காரணம் காட்டி 21 தமிழர்களுக்கு மரணம் பிடித்த பொழுது அதை எதிர்த்து மக்கள் பண்பாட்டு பேரவை சார்பில் நடைபெற்ற கலை பிரச்சார குழு மேடையில் பல்லாவரத்தில் கத்தார் கலந்து கொண்டார்..” என நீண்டு செல்கிறது அவரது  முகநூல் குறிப்பு.

 மேலும் இந்த குறிப்பில்  ”ஒவ்வொரு மொழியிலும் உள்ள நாட்டுப்புற பாடல்களை கதை பாடல்களை எப்படி புரட்சிகர பாடல்களாக மாற்ற வேண்டும் என்று கத்தார் வலியுறுத்திக் கொண்டிருந்தார்.. வெறுமனே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவது, இசைக்கருவிகளை இசைப்பது மக்கள் மத்தியில் கருத்துக்களை கொண்டு செல்வதற்கு உதவாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்..

இளையராஜா மேடையில் தோன்றினால் ஒரு பத்தாயிரம் பேர் கூடுவார்கள் ஆனால் எனக்கு பல லட்சம் பேர் கூடுவது தோழர்களின் கூட்டு உழைப்பு தான் காரணம் என்று அடிக்கடி கத்தார் கூறுவார்.. கடைசி 10 ஆண்டுகள் அவர் அரசியல் பலவித இறக்கங்களை கொண்டிருந்தது.. என்றாலும் 77 வயதில் இறந்த கத்தார் தனது வாழ்க்கையின் 45 ஆண்டுகளுக்கு மேலாக முழு நேர புரட்சியாளராக முழு நேர புரட்சிகர பாடல் பிரச்சாரகராக நாடு முழுவதும் புரட்சிகர அரசியலை பரப்பியது என்றும் நினைவு கூறத்தக்கது,’ எனவும் குறிப்பிட்டுள்ளார்.