போலி ஐஏஎஸ் அதிகாரி பிடிபட்டார் என நிறையக் கேள்விப்பட்டும் செய்தித்தாள்களில் படித்தும் வருகிறோம். ஆனால் தான் ஐ எப் எஸ் அதிகாரியாக ஸ்பெயினில் உள்ள மாட்ரிட் நகரில் பணிபுரிந்துவருவதாக இரண்டு ஆண்டுகளாக பெற்றோரை ஏமாற்றி வந்த பெண் தற்போது குட்டு உடைந்து சிக்கி உள்ளார்.
உபி மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜோதி. அவர் டெல்லியில் படித்துவந்தார். நன்றாகப் படிக்கக்கூடியவரான அவர் குடிமைப் பணித் தேர்வுகளை எழுதினார். ஆனால் தேர்வாகாத நிலையில் போலியாக தேர்வுக் கடிதம், குடிமைப்பணி பயிற்சி நிலைய போலி அடையாள அட்டை, ஸ்பெயின் பணியர்த்தப்படுவதாக போலி கடிதம் போன்றவற்றைத் தயாரித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைவரையும் ஏமாற்றி வந்திருக்கிறார்.
ஸ்பெயினில் மகள் இருக்கிறாள் என்று பெற்றோர் நம்பி இரவு பத்து மணிக்குப் பின் அவரிடம் பேசி வந்துள்ளனர். ஆனால் ஜோதியோ டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தவாறே அவர்களை ஏமாற்றி வந்துள்ளார்.
சமீபத்தில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பூஜா என்ற ஐ ஏ எஸ் அதிகாரி போலி சான்றிதழ் சர்ச்சையில் மாட்டியபோது, ஜோதியும் போலி சான்றிதழைத் தந்து தேர்வாகி உள்ளார் என்று சமூக ஊடகத்தில் குற்றம் சாட்டப்பட்டார். ஏனெனில் அவரது பெயரிலேயே எஸ்.சி பிரிவைச் சேர்ந்த ஒரு பெண் தேர்வாகி இருந்தார். ஆனால் இந்த ஜோதியோ பிராமணப் பிரிவைச் சேர்ந்தவர். இவர்தான் எஸ்.சி என சான்றிதழ் கொடுத்து ஏமாற்றி உள்ளார் என குற்றம் சாட்டப்பட, கடைசியில் நான் குடிமைப்பணியிலேயே இல்லை. என்னால் தோல்வியைத் தாங்க முடியாது; எனவே அனைவரையும் ஏமாற்றி விட்டேன் என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
அவரது தந்தை சுரேஷ் நாராயண் மிஷ்ரா என்பவர். காவல்துறையில் உதவி ஆய்வாளர்.. பெற்ற மகளே தன்னை ஏமாற்றியதை அவர் எப்படி எடுத்துக்கொண்டிருப்பார்?
அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp