மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
அவற்றின் கணிப்புகள், பா.ஜ.க. தலமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வரும் என்று கூறுகின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. - இந்தியா கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பிடிக்கும் என்று கணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு 33 முதல் 37 தொகுதிகள் வரையும், இரண்டு முதல் நான்கு தொகுதி வரை பாஜகவுக்கும் கிடைக்கும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. அதன் கணிப்புப்படி, அதிமுகவுக்கு 0 முதல் 2 தொகுதிகள் வரை கிடைக்கக்கூடும்.
சி.என்.என். - நியூஸ்18 கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு 36 முதல் 39 இடங்களும், பாஜக கூட்டணிக்கு 0 முதல் 2 இடங்களும், அதிமுக கூட்டணிக்கு 1 முதல் 3 இடங்களும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக்கணிப்பின்படி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணிக்கு 35 முதல் 38 தொகுதிகளும், பா.ஜ.க. கூட்டணிக்கு 0 முதல் 3 தொகுதிகளும், அ.தி.மு.க.வுக்கு 0 முதல் 1 தொகுதியும் கிடைக்கலாம் என்று கணித்துள்ளது.
டைம்ஸ் நவ் கணிப்பின்படி, தேசிய அளவில் உள்ள 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 358 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 152 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 33 தொகுதிகளும் கிடைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் பார்க்கும்போது ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் கருத்துக் கணிப்பின்படி, இந்திய அளவில் பாஜக கூட்டணிக்கு 353 முதல் 368 தொகுதிகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு 118 முதல் 133 தொகுதிகளும், இதர கட்சிகளுக்கு 43 முதல் 48 தொகுதிகளும் கிடைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சிஎன்என் கணிப்பின்படி, பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 355 முதல் 370 இடங்களைப் பிடிக்கலாம் என்றும், இந்தியா கூட்டணி 125 முதல் 140 இடங்களைப் பிடிக்கலாம் எனவும், இதர கட்சிகளுக்கு 42 முதல் 52 இடங்கள் வரை கிடைக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.