நிலவின் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்துவரும் சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து பூமி, நிலவை எடுத்த படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. அவை மனதை மயக்கக்கூடியதாக உள்ளன.
நிலவுக்கு கடந்த ஜூலை 14ஆம் தேதி அனுப்பப்பட்ட சந்திராயந்3 விண்கலம், நல்லபடியாக அதன் பாதையில் முன்னேறி வருகிறது. புவியின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து சந்திராயன் விண்கலம் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று உந்தித் தள்ளப்பட்டது. கடந்த 6ஆம் தேதி வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதைக்குள் அதன் பயணப்பாதை முதல் முறையாகக் குறுக்கப்பட்டது.
தொடர்ந்து நேற்று மதியம் இரண்டாம் கட்டமாக சந்திராயன் விண்கலத்தின் பயணப் பாதை மேலும் குறைக்கப்பட்டது. அடுத்தும் இரண்டு சுற்றுகள் விண்கலத்தின் பாதை குறுக்கப்பட்டு, நூறுக்கு நூறு கிமீ சுற்றுவட்டப் பாதைக்குள் கொண்டுவரப்படும்.
பின்னர் விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் தரையிறக்கப்படும்.
அந்த நாளை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், சந்திராயன் பூமியையும் நிலவையும் எடுத்த புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஜூலை 14ஆம் தேதி ஏவப்பட்ட அன்று லேண்டர் கிடைமட்டத் திசைவேக கேமரா மூலம் பூமி படம் எடுக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் உள்ள விண்வெளிப் பயன்பாடுகள் மையம், பெங்களூரு மின்னணு ஒளியிழை அமைப்புகள் ஆய்வகம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட லேண்டர் இமேஜரும், இந்த கேமராவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பின்னர், நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திராயன் 3 விண்கலம் நுழைந்த மறுநாளன்று நிலவின் மேற்பரப்பை லேண்டர் இமேஜர் படம் பிடித்தது. இந்தப் படத்தில் நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் தெளிவாகத் தெரிகின்றன.