நிதி ஒதுக்கீட்டில் மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக எம்.பி.க்கள் பிரச்னை எழுப்பியபோது, மத்திய அமைச்சர் குறுக்கிட்டதால், மக்களவையில் இரு தரப்புக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணத் தொகை விடுவிப்பது தொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இன்று கேள்வி எழுப்பி பேசினார்.
“தேசிய பேரிடர் நிதியை பிற மாநிலங்களுக்கு ஒதுக்குவதுபோல், தமிழகத்துக்கும் பாரபட்சமின்றி ஒதுக்க வேண்டும்” என்று ஆ.ராசா கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உட்பட்டோரும் தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் ஒதுக்க கோரி மக்களவையில் பேசினார்.
அதையடுத்து, தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி குறித்தும், மிக்ஜாம் புயல் பாதிப்புக்கு போதிய அளவுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.
அப்போது, மத்திய இணையமைச்சர் நித்யானந்த ராய் குறுக்கிட்டு, “நிதி ஒதுக்குவதில் எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை” என்றார்.
டி.ஆர்.பாலு, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார், அப்போது மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குறுக்கிட முயன்றபோது, அதற்கு டி.ஆர். பாலு, எல்.முருகனைச் சாடிப் பேசினார்.
“நீங்கள் எம்பியாக இருக்கவும், மத்திய அமைச்சராக இருக்கவும் தகுதி இல்லாதவர்” என்று அவர் குறிப்பிட்டது, பா.ஜ.க. உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானது.
அமைச்சர்கள் பலரும் பாலு தன் பேச்சுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறினர்.
குறிப்பாக பிரகலாத் ஜோஷி, அர்ஜுன் மேக்வால் ஆகியோர் பாலுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர்கள் பதிலுக்கு சத்தமாகக் குரல் எழுப்ப... அவையில் அமளி ஏற்பட்டது.
சிறிது நேரம் இதைக் கண்டு அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்த அவைத்தலைவர் ஓம்பிர்லா, அடுத்த கேள்விக்கான பதிலை வழங்குமாறு அமைச்சரைக் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, தி.மு.க. எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர்.