டெல்லியில் பட்டாசு வெடிக்க தடைவிதிப்பு 
இந்தியா

காற்று மாசு… பட்டாசுக்கு முற்றிலும் தடைபோட்ட தலைநகரம்!

Staff Writer

தலைநகர் டெல்லியில் பட்டாசுகளுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயல்படும் மாசு கட்டுப்பாட்டு கமிட்டி நேற்றுவெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: டெல்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் வரும் 2025,ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்துவகை பட்டாசுகள் வெடிக்க முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் பட்டாசு உற்பத்தி, சேமித்து வைத்தல், விற்பனை, ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் டெலிவரி ஆகியவற்றுக்கும் தடை விதிக்கப்படுகிறது.

இந்த தடை உத்தரவை டெல்லி காவல் துறை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த உத்தரவு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாசு கட்டுப்பாட்டு கமிட்டிக்கு தினமும் அறிக்கை அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசுபாட்டுக்கு அதிக வாய்ப்புள்ள இடங்களில் காற்றின் தரத்தை கண்காணித்து வருவதற்காக டெல்லிஅரசு முதல்முறையாக ட்ரோன்களை பயன்படுத்த உள்ளது. வாகனங்கள் மற்றும் தூசுக்களால் ஏற்படும் மாசுபாடு, வைக்கோல் கழிவுகள் மற்றும் குப்பைகளை எரிப்பதால் ஏற்படும் மாசுபாடு, தொழிற்சாலை மாசுபாடு எனஅனைத்து வகை மாசுபாடுகளையும் தனித்தனியே கண்காணிக்க உள்ளது. காற்று மாசுபாடு தொடர்பான கட்டுப்பாட்டு அறையை மேம்படுத்த உள்ளது.

மேலும் அரசு மற்றும் தனியார் துறையில் ‘வொர்க் ஃபிரம் ஹோம்'(வீட்டிலிருந்தே பணிபுரிவது) கொள்கை அறிமுகம், ஒற்றைப்படை, இரட்டைப்படை பதிவு எண்வாகனங்களுக்கு ஒருநாள் விட்டுஒருநாள் அனுமதி, மாசு துகள்களை அகற்ற செயற்கை மழைக்கான வாய்ப்பு என பல்வேறு திட்டங்களை டெல்லி அரசு வகுத்துள்ளது.

டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், “டெல்லியை சுற்றியுள்ள பிராந்தியங்களில் வைக்கோல் கழிவுகள் எரிக்கப்படுவது, தலைநகரில் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணமாக உள்ளது. இதை தடுக்க அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்” என்றார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram