இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மத்திய அரசு அறிவித்ததை விட 8 மடங்கு அதிகம் என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் 4,81,000 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன. ஆனால், இந்திய அரசு வெளியிட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் கொரோனா உயிரிழப்பு நிகழ்ந்ததாக சர்வதேச ஆராய்ச்சி நிறுவனங்கள் சுட்டிக்காட்டி வருகின்றன.
அந்தவகையில், மத்திய அரசின் தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5 (NFHS-5) இன் தரவுகளைப் பயன்படுத்தி, பிரிட்டனின் ஆக்ஸ்போா்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு நடத்திய ஆய்வின் முடிவுகள் ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிடப்பட்டுள்ளன.
7.65 லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, கொரோனா பெருந்தொற்று தாக்கிய 2019 மற்றும் 2020-ஆம் ஆண்டுக்கு இடையில் பாலினம் மற்றும் சமூகக் குழுவின் அடிப்படையில் இந்தியாவில் ஆயுள்கால எதிர்பார்ப்புகளில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்தும் இந்த ஆய்வில் மதிப்பிடப்பட்டது.
அதன்படி, பெண்களின் ஆயுள்காலம் 3.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. ஆண்களுக்கு 2.1 ஆண்டுகள் குறைந்துள்ளது. குடும்பங்களுக்குள் சுகாதாரம் மற்றும் வள விநியோகத்தில் உள்ள பாலின ஏற்றத்தாழ்வுகள் இதற்கு சாத்தியமான காரணங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும், இந்தியாவில் கொரோனாவால் கூடுதலாக 11.9 லட்சம் உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என்றும், இது அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 8 மடங்கு அதிகம் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆய்வு முடிவுகள் ஏற்கக்கூடியது இல்லை எனவும் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆய்வில் பல குளறுபடிகள் உள்ளன. எனவேதான் ஆய்வாளர்கள் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். இந்தியாவின் சிவில் பதிவேடு அமைப்பில் 99 சதவீத உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தியாவில் 2019ஆம் ஆண்டை ஒப்பிடும் போது 2020இல் 4.74 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே 11.99 லட்சம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதது.” என மத்திய அரசு கூறியுள்ளது.