சைபர் குற்றம் 
இந்தியா

புது ‘கூரியர் போதை’ மோசடி - ரூ.2.2 கோடியை ஆட்டையைப் போட்ட சைபர் குற்றக் கும்பல்!

Staff Writer

கூரியரில் போதைப் பொருள் வந்திருப்பதாகக் கூறி 2 .2 கோடி ரூபாயை மோசடி செய்திருக்கிறது, ஒரு கும்பல். கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்த வாரத்தில் மட்டும் இப்படி இரண்டு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. 

பெங்களூர் எச்.எஸ்.ஆர். லே அவுட் பகுதியைச் சேர்ந்த 52 வயது வணிகர் தாரக் ஷாவை, பன்னாட்டு கூரியர் நிறுவன ஊழியரென ஒருவர் தொலைபேசியில் அழைத்துள்ளார். அவரின் பெயருக்கு மும்பையிலிருந்து அனுப் பப்பட்ட பார்சலில் போதைப்பொருள் இருந்தது என்றும் இதைப் பற்றி மும்பை காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளதாகவும் எனவே ஸ்கைப் வழியாக தன்னுடன் பேசுமாறும் கூறி, இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கலவரப்படுத்தியுள்ளார்.

அதைக் கேட்டு மிரண்டுபோயிருந்த தாரக் ஷாவிடம், மறுநாள் வேறு ஒருவர்,தான் மும்பை காவல்துறையிலிருந்து பேசுவதாகக் கூறி, விசாரணை செய்ததைப் போல நடந்துகொண்டுள்ளார். அப்போது,ஷாவின் வங்கிக் கணக்கு விவரங்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டு அதிலிருந்து விவரங்களை சரிபார்க்கப் போவதாகவும் சொல்ல... அதை நம்பிய ஷாவும் அப்படியே எல்லாவற்றையும் ஒப்பித்ததைப் போலக் கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் தாரக் ஷாவின் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு கோடியே 98 இலட்சத்து 73 ஆயிரத்து 760 ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.   அதாவது அவருடைய வங்கிக் கணக்கிலிருந்த மொத்தப் பணமும் துடைத்து எடுக்கப்பட்டுவிட்டது. அப்போதுதான் அவருக்கு எங்கோ தவறு என உறைத்திருக்கிறது. 

பதற்றமடைந்தவர் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 

இந்த சம்பவம் கடந்த வியாழனன்று நடைபெற்றுள்ளது. அதற்கு முந்தைய நாளில் தாவரகரே பகுதியில் 36 வயதானதபாப்ராய் மைத்ரா என்பவரிடமும் இதே பாணியில், மும்பை சைபர் குற்றத் தடுப்பு போலீஸ் பேசுவதாகச் சொல்லி, 23 இலட்சத்து 27ஆயிரத்து 277 ரூபாயை ஆட்டையைப் போட்டிருக்கிறது, அந்த கும்பல். அவருடைய வங்கிக் கணக்கும் இதைப்போலவே முழுக்கவும் துடைக்கப்பட்டிருந்தது.

அண்மையில் இதேபோல கூரியரில் போதைப்பொருள் எனக் கூறி மோசடி செய்த எட்டு பேர் கும்பலை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஆனாலும் அதே பாணி மோசடிக் குற்றங்கள் தொடர்வதால், மாநகர காவல் ஆணையர் தயானந்தா தனிப்படை ஒன்றை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.