இந்தியா

காங்கிரஸ் வங்கிக் கணக்கு: முடக்கம் தற்காலிக நீக்கம்!

Staff Writer

வருமான வரித்துறையால் முடக்கப்பட்டுள்ள காங்கிரஸ் வங்கிக் கணக்கு தற்காலிகமாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் வழக்கறிஞர் விவேக் தங்கா தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாததால் காங்கிரஸ் மற்றும் இளைஞர் காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கன் தெரிவித்திருந்தார்.

வருமான வரித்துறையின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இளைஞர் காங்கிரசார் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் முறையிடப்பட்டது. கட்சியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடமுடியாத சூழ்நிலை உருவாகும் என்று காங்கிரஸ் வழக்கறிஞர் விவேக் தங்கா வாதிட்டார்.

இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் முடக்கப்பட்ட வங்கிக்கணக்குகள் மீண்டும் செயல்பட வருமானவரித்துறை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், காங்கிரஸ் வங்கிக் கணக்குகளை பயன்படுத்த எந்த கட்டுப்பாடும் கிடையாது எனவும் வருமானவரித்துறை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு வரும் புதன்கிழமை மீண்டும் விசாரிக்கப்படும் என்றும், வழக்கை தீர்ப்பாயம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் செய்தியாளர் சந்திப்பில் வழக்கறிஞர் விவேக் தங்கா கூறினார்.