மத்தியப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களைப் பிடித்து ஆட்சியமைக்கும் என லோக் போல் கருத்துக்கேட்பு முடிவு தெரிவிக்கிறது.
அடுத்த மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில், வாக்காளர்களின் மனநிலையை அறியும் கருத்துக்கேட்புகள் நடத்தப்படுகின்றன. இதில் மத்தியப் பிரதேசத்தில் லோக் போல் நிறுவனம் நடத்திய கருத்துக்கேட்பின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, மொத்தமுள்ள 230 தொகுதிகளில் ஆளும் பா.ஜ.க. 98 முதல் 110 இடங்கள்வரை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 43- 45 சதவீத வாக்குகள் இந்தக் கட்சிக்கு கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் 120 முதல் 132 இடங்கள்வரை பெறும் என்றும் இந்தக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்தக் கட்சிக்கு 44 முதல் 46 சதவீதம்வரை வாக்குகள் கிடைக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு இரண்டு இடங்கள்வரை கிடைக்கலாம் என்றும் மற்ற கட்சிகள் 4 இடங்கள்வரை பெறும் என்றும் லோக் போல் கணிப்பு முடிவு கூறுகிறது.
வாக்கு சதவீதம் எனப் பார்க்கையில், 44.6 சதவீதம் பெறும் காங்கிரசைவிட ஒரு புள்ளி கூடுதலாக பா.ஜ.க. 44.7 சதவீதம் பெறும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.