மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஐ.ஏ.எஸ். பயிற்சியில் இருந்தபோது அத்துமீறி நடந்துகொண்ட பூஜா கேத்கர் எனும் 34 வயது பெண் அதிகாரி, ஆட்சிப்பணியிலிருந்தே நிரந்தர நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீதான புகார்களை விசாரித்த ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், அவர் மீது புதுதில்லி காவல்துறையில் புகாரும் அளித்துள்ளது. அதன்படி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தன் தந்தை, தாய் இருவரின் பெயர்கள், கையொப்பம், படம், தொலைபேசி எண், முகவரி என பலவற்றையும் மாற்றிக்கொடுத்து, அனுமதிக்கப்பட்ட அளவைத் தாண்டி ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதியதும் உறுதிசெய்யப்பட்டது. கடந்த 2022இல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இவர் தேர்வுசெய்யப்பட்டதை ரத்துசெய்தும், வருங்காலத்தில் எந்த குடிமைப் பணித் தேர்வையும் இவர் எழுதவிடாமல் தடைசெய்தும் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கெரா, தேர்வாணையத்தின் ஆட்சேர்ப்பு செயல்பாட்டின் நேர்மைத்தன்மை மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
“ஆட்தேர்வில் இதைப் போல எத்தனை தகுதியில்லாதவர்கள், இப்படி அரசின் உயர் பதவிகளில் வந்திருப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. இந்த விவகாரம் குறித்து உயர்மட்டக்குழு மூலம் முழுமையாக ஆய்வுசெய்ய வேண்டும்.” என்றும் பவன் கெரா கூறியுள்ளார்.