நிலவைச் சுற்றிவரும் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை நான்காவது முறையாக இன்று காலை வெற்றிகரமாகக் குறைக்கப்பட்டது.
கடந்த மாதம் இஸ்ரோவால் அனுப்பிவைக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம், ஆகஸ்ட் 5ஆம் தேதி நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்தது. படிப்படியாக அதன் சுற்று வட்டப் பாதை குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகில் செல்லும்படி செய்யப்பட்டது. பெங்களூருவில் உள்ள தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து அதற்கான பணிகளை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன அறிவியலாளர்கள் செய்துவந்தனர்.
நான்காவது முறையாக சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்று வட்டப் பாதையை, இன்று காலை 8.30 மணிக்கு, மேலும் குறைத்து இஸ்ரோ குழுவினர் சாதித்துக் காட்டினர். அதன்படி, இப்போது 153 கி.மீ.>163 கி.மீ. என்கிற சுற்று வட்டத்துக்குள் கொண்டுவரப் பட்டது.
இத்துடன், நிலவில் சந்திராயனின் சுற்று வட்டப் பாதை குறைக்கும் பணி வெற்றிகரமாக முடிவடைந்தது என்று இஸ்ரோ அறிவியலாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
அடுத்த பணியாக, லேண்டரைத் தனியாகப் பிரிக்கும் பணி தொடங்கும். நாளை 17ஆம் தேதி புரொப்பல்சனில் இருந்து லேண்டரைப் பிரிக்கும் பணியை மேற்கொள்ள இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.