மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில், மத்திய பா.ஜ.க. அரசு பாரபட்சம் கட்டுவதைக் கண்டித்து கேரள இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கை கடந்த 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதி நிலை அறிக்கையில் தமிழ்நாடு,கேரளா, கர்நாடகம் ஆகிய தென்னிந்திய மாநிலங்களும், பா.ஜ.க. ஆளாத மேற்கு வங்கம், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களும் புறக்கணிக்கப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
நிதி ஒதுக்கீடு செய்வதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தென் மாநிலங்கள் போர்க்கொடி துக்கியுள்ளன.
அந்தவகையில், கர்நாடகத்துக்கு அநீதி இழைத்துள்ளதாக மத்திய அரசை கண்டித்து கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உட்பட அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.கள் என சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தி.மு.க. சார்பில் பழனிவேல் தியாகராஜன் உட்படப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.