காவிரியிலிருந்து தமிழகத்துக்கு வினாடிக்கு 18,000 கன அடி நீரை திறந்துவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளது.
காவிரி நதிநீர் விவகாரத்தில் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் அமைத்தாலும், பிரச்னை முடிவுக்கு வரவில்லை.
சமீபத்தில், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு கர்நாடகா கடந்த 9-ஆம் தேதி வரை திறந்துவிட வேண்டிய 37.9 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதனை கர்நாடகா மறுத்ததால் தமிழ்நாடு பிரதிநிதிகள் ஆணையக் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதனையடுத்து தமிழ்நாட்டுக்கு அடுத்த 10 நாட்களுக்கு வினாடிக்கு 10,000 கன அடி நீரை காவிரியில் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கும் தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தமிழ்நாட்டுக்கு நடுவர் மன்ற தீர்ப்புப் படியும் உச்சநீதிமன்றம் உறுதி செய்த தீர்ப்புப் படியும் திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவு நீரை உடனே திறக்க தமிழ்நாடு வலியுறுத்தி வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்ய உள்ளது. இது தொடார்பாக டெல்லியில் ஆலோசனை நடத்தப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழ்நாடு அரசு சார்பில், தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினாடிக்கு 18,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட உள்ளது. இம்மனுவை உடனடியாக உச்சநீதிமன்றம் விசாரிக்கக் கூடும் என தெரிகிறது.