தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் 
இந்தியா

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கியது!

Staff Writer

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கியது. அம்மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பிரபாகர் கணக்கெடுப்பை இன்று தொடங்கி வைத்தார்.

தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி கடந்த டிசம்பர் மாதம் பதவியேற்றார். தேர்தலுக்கு முன்பே தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில் சொன்னபடியே தெலங்கானா மாநில அரசு, சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பிரபாகர், இன்று சாதிவாரி கணக்கெடுப்பை தொடங்கி வைத்தார். இந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களின் சமூக, பொருளாதார, கல்வி மற்றும் அரசியல் புள்ளிவிவரங்கள் பற்றிய விரிவான தரவுகளை சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சாதிவாரி கணக்கெடுப்பு இன்று முதல் இம்மாத இறுதி வரை ஏறக்குறைய மூன்று வாரங்கள் நடைபெற உள்ளது. இந்த கணக்கெடுப்புக்காக தெலுங்கானா அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. மொத்தம் 1,17,44,000 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்த 85,000 கணக்கெடுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த மூன்று நாள்களுக்கு தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு சென்று ஸ்டிக்கர்களை ஒட்டுவார்கள். நவம்பர் 9ஆம் தேதி முதல் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கேள்விகள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பகுதி 1-இல் உள்ள கேள்விகள் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் வகையிலும் பகுதி 2 இல் உள்ள கேள்விகள் குடும்பத்தின் பொதுவான தகவல்களை சேகரிக்கும் வகையிலும் உள்ளன.

சேகரிக்கப்பட்ட தரவுகள் உடனுக்கு உடன் கணினிகளில் அப்டேட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதிக்குள் முழு கணக்கெடுப்பும் முடிவடைந்து, டிசம்பர் 9ஆம் தேதிக்குள் அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.